பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

மொஹெஞ்சொ - தரோ


ஆறு சரங்கொண்ட அழகிய கையணி

மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்த காப்புகள், வளையல்கள் முதலிய கையணிகளுள் சிறப்பித்துக் கூறத்தகுவன சில உள. அவையே உருண்டையான தங்கமணிகளை ஆறு சரங்களாகக் கோத்துச் செய்யப்பட்ட கையணிகள் ஆகும். உருண்டை மணிகட்கு இடையே தட்டையான தங்க மணிகளும் கோக்கப்பட்டுள்ளன. சரங்கள் முடியும் இடத்தில் அரைவட்ட வடிவில் தங்கத்தகட்டால் ஆன முகப்புகள் காணப்படுகின்றன. இவை போன்றவை ஹரப்பாவிலும் கிடைத்துள்ளன.

உள்ளே அரக்கிட்ட காப்புகள்

கையணிகளில் பலவகை இருக்கின்றன. தங்கம், வெள்ளி, செம்பு, வெண்கலம், பளிங்கு வெண்கல், கறுப்புக்கல், சங்கு, சிப்பி, களிமண் முதலியவற்றால் கையணிகள் செய்யப்பட்டுள்ளன. சில காப்புகளில் உட்புறம் அரக்கும் அரக்குப்போன்ற வேறொரு பொருளும் உருக்கி ஊற்றப்பட்டன என்பது தெரிகிறது. ஹரப்பாவில் பல காப்புகள் கிடைத்துள்ளன. அவற்றுள் ஒன்று முற்றும் செம்பினால் ஆனது ஒன்று உள்ளே அரக்கிடத்தக்கதாக வெள்ளியால் செய்யப்பட்டது. ஹரப்பாவில் தங்கக் கடகங்களும் கிடைத்துள்ளன.

பலவகைப்பட்ட வளையல்கள்

செம்பாலும் வெண்கலத்தாலும் செய்யப்பட்ட கையணிகள், இப்போது செய்யப்படும் தங்க வளையல்கள் போலக் காட்சி அளிக்கின்றன. இவற்றுள் சில உருண்டையாகவும் சில தட்டையாகவும் செய்யப்பட்டுள்ளன. சில வளையல்களில் இரண்டு முனைகளும் பொருந்தியுள்ளன; சிலவற்றுள் வாய் விரிந்து காணப்படுகின்றது. சிப்பியால் செய்யப்பட்ட வளையல்கள் அகலமாக இருக்கின்றன. சிப்பித் துண்டுகள் இரண்டு மூன்று நூலால் இணைக்கப்பட்டுக் கைகளில் அணியப்பட்டன. பளிங்கு வளையல்கள் சிலவே காணப்படுகின்றன. அவை