பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிகலன்கள்

137


சிறிய பட்டாடையாகவும், பெரிய பட்டாடையாகவும் செய்யப்பட்டுள்ளன. களிமண் வளையல்கள் மிக்க கவனத்துடன் செய்யப்பட்டுச் சிறந்த முறையில் சூளையிடப்பட்டுள்ளன. இவற்றைச் செய்யப் பயன்பட்ட களிமண் மிகவும் உயர்ந்ததாகும் என்பது அறிஞர் கருத்து.

ஒவியம் திட்டப்பட்ட வளையல்கள்

களிமண் கொண்டு செய்யப்பட்ட வளையல்கள் வெவ்வேறு நிறங்களுடனும் ஒவியங்களுடனும் காணப்படுகின்றன. சில வளையல்கள் மீது புள்ளிகள் இடப்பட்டுள்ளன. இத்தகைய களிமண் வளையல்களை ஏழைப் பெண்மணிகளே அணிந்திருந்தனர் போலும்! இக்காலத்தும் ஏழை மாதர் செம்பு, வெண்கலம், பித்தளை, கண்ணாடி முதலியவற்றாற் செய்யப்படும் வளையல்களை அணிந்துள்ளனர் அல்லவா? இவர்களைப் போலவே, அக்கால ஏழை மகளிரும் இவற்றாலாய அணிகளை அணிந்தனர் என்று கோடல் பொருத்தமாகும்.

கால் காப்புகள்

மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த காப்பு வகைகளிற் கைக்குப் பயன்பட்டவை இவை, காலிற்குப் பயன்பட்டவை இவை, என்று உறுதியாகக் கூறுதற்கு இல்லை. ஆயினும், சில பதுமைகளின் கால்களில் வளைந்த கோணல் காப்புகள் இருப்பதாகத் தெரிவதால், அப்பழங்காலப் பெண்டிர் கால் காப்புகளை அணிந்திருந்தனர் என்று கூறுதல் தகும். இத்தகைய கால்காப்புகளையே சிம்லாவைச்சூழவுள்ள மலைப்பிரதேசத்தில் வாழும் பெண்டிர் அணிந்து வருகின்றனர். மேலும் கிரீட் தீவில் கண்டெடுக்கப்பட்ட மங்கிய உருவம் ஒன்றின் கால்களிலும் இத்தகைய கோணற்காப்புகள் காணப்படுகின்றன.[1] இவை போன்ற காப்புகளையே இன்றும் வடுக மகளிர் கால்களில் அணிகின்றனர்.


  1. Dr.E. Mackay’s ‘The Indus Civilization’, p.117