பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிகலன்கள்

139


காதணிகள்

சில களிமண் பதுமைகள் காதணிகளுடன் இருக் கின்றன.அவற்றால், அக்கால மகளிர் பலவகையான காதணிகளை அணிந்து வந்தனர் என்பதை அறியலாம். சில காதணிகள், தங்கச் சுருள் போலக் காணப்படுகின்றன. சில சிறு குழாய்களையுடைய குமிழ்போலச் செய்யப்பட்டவை. அவை, காதுகளில் உள்ள துளைகளிற் செலுத்தப்பட்ட பின்னர் மற்றொரு துண்டு வைத்துத் திருகாணி போலப் பொருத்திவிடத் தக்கவாறு அமைந்துள்ளன. இவை தங்கத்தாற் செய்யப்பட்டவை; சிறிது கூம்பிய கோபுர. வடிவுடன் காணப்படுகின்றன. இக்கூம்பிய பகுதியிற்றான் குழாய் வைத்துப் பற்றவைக்கப்பட்டுள்ளது. வேறு சில காதணிகள் தங்கத்தால் வளையங்களாகச் செய்யப்பட்டுள்ளன. இவை, தமிழ்நாட்டு மகளிர் வடிகாதுகளில் அணிந்து கொள்ளும் வளையங்களாகக் காட்சி அளித்தல் கவனிக்கத் தக்கது.

மூக்கணிகள்

ஒரங்களிற் பற்களைக் கொண்ட சக்கரம் போன்ற தங்கத்தகடுகளும் பிறவும் அக்கால மூக்கணிகளாகப் பயன்பட்டன என்று அறிஞர் சிலர் கருதுகின்றனர். ஆயின், தீக்ஷித் என்பவர், ‘மூக்கணிகள் அப்பண்டைக் காலத்தில் இருந்தன என்று உறுதியாகக் கூறக்கூடவில்லை. என்னை? களிமண் பதுமைகளுள் ஒன்றிலேனும் மூக்கணிக்கு உரிய அடையாளம் இன்மையின் என்க. மேலும் கி.பி.1200-க்குப் பின்னரே மூக்கில் துளையிடும் வழக்கம் முஸ்லிம்களால் இந்நாட்டிற் புகுத்தப்பட்டது’[1] என்று அறிவிக்கிறார். ஆனால், அறிஞர் சி. ஆர். இராய் என்பார், ‘சிந்துப் பிரதேச மகளிர் மூக்கணிகள் அணிந்திருந்தனர். அவ்வணிகள் காதில் உள்ள தோடுகளுடன் பொற்சங்கிலியால் இருபுறமும் இணைக்கப்பட்டிருந்தன’,[2] என்று கூறுகிறார்.


  1. K.N.Dikshit’s ‘Pre-historic Civilization of the IV’, p.27
  2. His Article on ‘Mohenjo-Daro. In the ‘Indian World’.