பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

மொஹெஞ்சொ - தரோ


தொங்கவிடப்பட்டிருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர்.[1] சுமேரியர் இத்தகைய நாடாக்கள் மீது விலங்குகளின் சித்திரங் களையும், வெறும் புள்ளிகளையும் தீட்டிப் பயன்படுத்தி வந்தனர்.

கொண்டை ஊசிகள்

ஆடவரும் பெண்டிரும் கூந்தலைக் கோதிக் கொண்டை இடுவுதும் சுருட்டிக் கட்டிக் கொள்வதும் வழக்கம். அக்கட்டுகள் நெகிழ்னமல் இருக்கக் கொண்டைஊசிகள் பயன்பட்டன. அங்குக் கிடைத்த படிவங்களைக் காண்கையில், அம்மக்கள் பலதிறப்பட்ட கொண்டை ஊசிகளைப் பயன்படுத்தினர் என்பது தெளிவாம். சிதறுண்ட ஊசிகள் பல கண்டெடுக்கப்பட்டன. அவற்றுள் சிறப் புடையது வெண்கலக் கொண்டை ஊசி ஒன்றே ஆகும். அது 11 செ. மீ. நீளம் இருக்கிறது. அதன் உச்சியில் இரண்டு கறுத்த கலைமான் தலைகள் வெவ்வேறு திசையை நோக்குவனவாய் அமைந்துள்ளன. அக்கலைமான்களின் கொம்புகள் அழகுற முறுக்கிக் கொண்டிருப்பனபோலச் செய்யப்பட்டுள்ளன. மற்றொரு வெண்கல ஊசியில் சுருண்ட கொம்புடைய தலை ஒன்று காணப்படுகிறது. இவ்வகை ஊசிகள் சுமேரியர், எகிப்து, காகஸஸ், நடு ஐரோப்பா ஆகிய இடங்களிற் கிடைத்த ஊசிகளைப் போலவே இருக்கின்றன. தந்தம், எலும்பு முதலியவற்றால் ஆன கொண்டை ஊசிகளும் கிடைத்துள்ளன.சில ஊசிகள் தலைப்புறம் மட்டும் உலோகத்தாலும், குத்திக்கொள்ளும் பகுதி மரத்தாலும் செய்யப்பட்டுள்ளன. ஆயின், அவற்றின் தலைப்பகுதியே கிடைத்தது. மரப்பகுதி அழிந்துவிட்டது. இவ்வாறு கிடைத்த தலைப்பகுதி ஒன்று 1 செ. மீ. உயரம் இருக்கின்றது; அதன்மீது மூன்று குரங்குகள் தோள்களிற் கைகோத்துக் கொண்டு சுற்றி உட்கார்ந்திருப்பனபோலச் செய்யப்பட்டுள்ளன.


  1. இந்நாடாக்களும் முன்சொன்ன தலைச்சுட்டிகளும் தமிழ்நாட்டுத் திருமணங்களில் மணமகள் அணியும் தலையணிகளைப் பெரிதும் ஒத்தனவே ஆகும். இவை மொத்தமாகத் தலைச் சாமான் (தலை அணிகள்) என்று இக்காலத்திற் சொல்லப்படுகின்றன.