பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிகலன்கள்

145


ஒன்று சிவப்பு, வெள்ளை, நீலம் முதலிய நிறங்களைக் கொண்ட ஐந்துவிதக் கற்களை ஒட்டவைத்துச்செய்யப்பட்டுள்ளது. ஆயின், இம்மணியைப் பார்த்தவுடன் இதன் கலப்பை உணர்ந்து கூறுதல் இயலாது எனின், இதன் வேலைப்பாட்டை என்னென்பது! இம்மணி இப்பொழுது உடைந்து கிடப்பதால் இதன் மர்மம் வெளிப்பட்டது. கோமேதகமோ என்று ஐயுறத்தக்கவாறு ஒரு மணி கிடைத்துள்ளது. அஃது ஒருபுறம் சிப்பி, மற்றொரு புறம் சற்றுச் சிவந்த சுண்ணக்கல் ஆகியவை கொண்டு பக்குவப்டுத்திப் போலிக் கோமேதக மணியாகச் செய்யப்பட்டுள்ளது வியத்தற் குரியதே இத்தகைய போலி மணிகள் மற்ற மணிகளைவிடச் சிறந்தனவாகக் காணப்படுகின்றன. இவை போன்ற போலி மணிகள் ‘நினவெஹ்’ என்னும் இடத்திலும் கிடைத்தன என்று அறிஞர் காம் பெல் தாம்சன் கூறுகின்றார்.

ஒவியம் அமைந்த மணிகள்

அறிஞர், ஒவியங்கொண்ட மணிகளே மிக்க சிறப் புடையவை என்று கருதுகின்றனர். சிவப்புக் கல்லில் பட்டை மணிகள், செய்து, அவற்றின்மீது வெள்ளை நிறங்கொண்ட சித்திரங்களைத் தீட்டித் தீயிலிட்டு, அச்சித்திரங்களைப் பதியச் செய்யும் முறை கையாளப்பட்டது. இத்தகைய மணிகள் பல மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்துள்ளன. இவைபோன்ற பல, உர் நகரத்து அரச பர்ம்பரையினர் சவக்குழிகளிலிருந்து எடுக்கப் பட்டன. அவை அளவிலும் உருவிலும் மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த மணிகளை ஒத்துள்ளன. எனவே, இம்மணிகள் சிந்து வெளியிற் செய்யப்பட்டனவா? சுமேரியாவிற் செய்யப்பட்டனவா? அன்றி வேறெங்கேனும் செய்யப்பட்டனவா? துணிந்து கூறுதற்கு இயலவில்லை. ஆயின், இம்மணிகள் சிந்து வெளியிற் கிடைத் திருப்பதாற்றான் இவற்றின் காலமும் சுமேரியரின் உயர் நாகரிகக் காலமும் ஒன்றெனக் கூறவும், அக்காலம் கி.மு. 3250 - கி.மு. 2750 என முடிவு கட்டவும் வசதி ஏற்பட்டது.