பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணிபம்

153


வெளி நாட்டு வாணிபம்

சிந்து வெளியிற் கிடைத்தி எழுத்துக் குறிகள், முத்திரைகள், ஒவியங்கள்,கருவிகள், மட்பாண்டங்கள் முதலியவற்றை ஆராய்ந்த நிபுணர் அவற்றுக்கும் ஏலம், சுமேர் மொசொபொட்டேமியா, எகிப்து முதலிய நாடுகளில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களுக்கும் உள்ள தொடர்பை நன்கு அறிந்து வியந்துள்ளனர். இப்பொருள்களின் ஒருமைப்பாட்டாலும் ஏற்றுமதி இறக்குமதிப் பொருள்களாலும், நாம், சிந்து நாட்டவர் செய்துவந்த வெளிநாட்டு வாணிபத்தை ஒருவாறு உணரலாம்.

(1) மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த உயர்ந்த சலவைக்கல் முத்திரைகளைப் போன்றவை மிகப் பலவாக ‘ஏலம்’ என்னும் நாட்டிற் கிடைத்துள்ளன. சலவைக்கல் பொருள்கள் மிகுதியாகச் சிந்து நாட்டிற் கிடைக்காமையானும், அவற்றின் மீது அமைந்துள்ள வேலைப்பாடு அந்நாடுகட்கே உரியவை ஆதலாலும், அவை ஏலம்-சுமேரியநாடுகளில் மிகுதியாகக் கிடைத் தலாலும், அவை அந்நாடுகளிலிருந்தே சிந்துவிற்குக் கொண்டு வரப்பட்டிருத்தல் வேண்டும் என்பது வெள்ளிடை மலை.[1]

(2) சில இந்திய முத்திரைகள் பழைய உர், கிஷ், டெல் அஸ்மர் என்னும் மொசொபொட்டேமியா நகரங்களில் கிடைத் துள்ளன. அங்கு இருந்த பிற பொருள்களும், அந்நகரங்களின் நாகரிக காலமும் கி.மு.3000 கி.மு.2500க்கு உட்பட்டன என்று அறிஞர் கூறுகின்றனர். எனவே, சிந்து நாகரிகமும் வெளிநாட்டு வாணிபமும் மேற்சொன்னகாலத்தனவேஎன்பது ஆராய்ச்சியாளர் முடிவாகும். டெல்அஸ்மரில் டாக்டர் பிராங்க்போர்ட் என்னும் அறிஞர் கண்டெடுத்த நீண்ட உருண்டையான முத்திரை சிந்து வெளியினதே ஆகும். அதில் பொறிக்கப்பட்டுள்ள யானை, காண்டா மிருகம், முதலிய ஆகிய மூன்றும் சுமேரியாவில் இல்லாதவை.


  1. Mackay’s Further Excavations at Mohenjo-Daro’ p. 639.