பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணிபம்

159


(4) தாய் குழந்தைக்குப் பால் கொடுத்தல் போன்ற சித்திரங்கள் பல எகிப்தில் கிடைத்தன. ஆனால், அவை சுமேரியாவில் காணப்படவில்லை. மொஹெஞ்சொ-தரோவில் இரண்டொரு சித்திரங்களே காணப்படுகின்றன. சில ஹரப்பாவிலும் கிடைத்துள்ளன.

(5) பல முகப்புகளைக் கொண்ட உயர்தர மணிகள் மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்துள்ளன. அவை எகிப்தைத் தவிர வேறு எந்தப் பண்டை நாட்டிலும் கிடைத்தில; எகிப்திலும், பிற்கால ரோமர்களின் கல்லறைகளிற்றாம் கண்டெடுக்கப்பட்டன. எனவே, அவை இந்தியாவிற்கே உரியவை என்பது அறியத்தக்கது.

(6) ஈ வடிவத்தில் செய்யப்பட்ட மணிகள் எகிப்திலும் மொஹெஞ்சொ-தரோவிலும் கண்டெடுக்கப்பட்டன. இவை, சுறுசுறுப்பையும் தொழில் முறுக்கையும் அறிவிக்கும் அடையாளங்கள் என்று அறிஞர் கருதுகின்றனர்.

(7) எகிப்தில் இருந்த 13, 17 ஆம் அரச தலைமுறையினர் காலத்தவை ஆகிய சித்திர எழுத்துக்களைக் கொண்ட மூன்று செம்புத் தகடுகள், மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்தவற்றையே பெரிதும் ஒத்துள்ளன.

(8) மெழுகு வர்த்தியைத் தாங்கும் மட்பாண்டங்கள், இரண்டு இடங்களிலும் ஏறக்குறைய ஒன்றாகவே கிடைத்துள்ளன.[1]

- (9) கற்பலகைகொண்டு சிப்பி வடிவிற் செய்யப்பட்ட கரண்டிகள் பல எகிப்தில் கிடைத்தன. சிந்து வெளியிலும் அத்தகையன கிடைத்துள்ளன. இவை களிமண்ணாலும் செம்பினாலும் செய்யப்பட்டவை. ஒவ்வொன்றன் நுனியிலும் கைப்பிடி இணைப்புக்கு உரிய துளை காணப்படுகிறது.[2]

  1. Mackay’s Further Excavations at Mohajo Daro. 641-643.
  2. Mackay’s ‘The Indus Civilization’, pp.196-197.