பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

160

மொஹெஞ்சொ - தரோ


இன்ன பிற சான்றுகளால், அப்பழங்காலச் சிந்துவெளி மக்களின் வாணிப உலகம், எகிப்துவரை பரவி இருந்தது என்பதை நன்கறியலாம் அன்றோ?

நீர்வழி வாணிபம்

உள் நாட்டு வாணிபத்தின் ஒரு பகுதி சிந்து ஆற்றின் மூலமாகவே நடந்தது. அப்பண்டைக் காலத்தில் ஒரே வித நாகரிகத்தில் இருந்த சிந்துவெளி நகரங்கள் பல சிந்து ஆற்றின் வழியே தமக்குள் வாணிபம் நடத்திக் கொண்டன; அரபிக் கடல் துறைமுகப் பட்டினங்கட்குத் தம் பொருள்களைப் படகுகளில் ஏற்றிச் சிந்து ஆற்றின் மூலம் அனுப்பின: மேற்குப் புற நாடுகளிலிருந்து துறைமுகப் பட்டினங்களை அடைந்த பொருள்களை முன்சொன்ன படகுகள் மூலமே பெற்றுக்கொண்டன.

பண்டை மக்கள், இங்ஙனம் சிந்துயாற்று வழியே வந்த பொருள்களைக் கப்பல்களில் ஏற்றிக்கொண்டு துறைமுகங்களை விட்டுக் கரை ஓரமாகவே தென் பலுசிஸ்தானம், தென் பாரசீகம், இராக், அபிசீனியா, எகிப்து என்னும் நாடுகளுடன் வாணிபம் செய்தனராதல் வேண்டும். அப்பண்டை மக்கள் பயன்படுத்திய முத்திரை ஒன்றில் கப்பல் படம் ஒன்றும், பானை மீது ஓடத்தின் படம் ஒன்றும் காணப்படுகின்றன. இப்படங்களால், அவர்கள் கடலிற் செல்லும் கப்பல்களையும் ஆற்றிற் செல்லும் ஒடங் களையும் நன்கு அறிந்து பயன்படுத்தினர் என்பதை அறியலாம்.

காம்பே வளைகுடாவைச் சேர்த்த புரோச்(Broach) காம்பே (Combay) என்னும் துறைமுகங்கள் இரண்டும் சிந்துவெளி நாகரிக காலத்தில் செழிப்புற்று இருந்தனவாதல் வேண்டும். அத்துறை முகங்களின் வழியே செந்நிறக்கல் மணிகளைப் பற்றிய வாணிபம் உயரிய நிலையில் இருந்திருத்தல் வேண்டும் நருமதை யாற்றுப் பள்ளத்


1. Mackay’s F.E. at Mohenjo-Daro’, p.340