பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

மொஹெஞ்சொ - தரோ

மட்பாண்டங்கள் மீதும் சுண்ணாம்புக் கற்களால் ஆன பாத்திரங்கள் மீதும் பிறவற்றின்மீதும் பொறித்து வைத்தான்; அக்கால அறிவுநிலைக்கு ஏற்றவாறு கற்களைக்கொண்டும் பச்சை மண்ணைக் கொண்டும், பின்னர்ச் சுட்ட செங்கற்களைக் கொண்டும். தன் மனத்திற்கினிய கோவில்களை அமைத்துக் கடவுளரை உண்டாக்கினான்;தான் வாழ்ந்த மருத நிலத்தை உழுது பயிர் செய்யலானான்; தனக்கு வேண்டிய பொருள்களை வைத்துக்கொண்டு எஞ்சியவற்றை, அவை கிடைக்கப்பெறாத மலை நாடுகளிலும் பாலைவனங்களிலும் பிற இடங்களிலும் இருந்த மக்கட்கு உதவி, தன்னிடம் இல்லாமல் அவர்களிடமே சிறப்பாக இருந்த பல் பொருள்களைப் பண்டமாற்றாகப் பெற்று வாழ்ந்து வந்தான். இப்பழக்கமே நாளடைவில் வாணிபமாக வளர்ந்தோங்கியது.

இங்ஙனம் ஒரு பகுதியில் வாழும் மக்கள் மற்றப் பகுதிகளில் வாழும் ம்க்களோடு வாணிபம் செய்யுங்கால் இருதிறத்தாரும் அவ்வப்போது கலந்து உறவாட வாய்ப்புகள் உண்டாதல் இயல்பு. அக்கூட்டுறவினால் ஒரு சாராரிடம் காணப்படும் நல்லியல்புகள் பலவற்றைப்பிறிதொரு சாரார் கைக்கோடல் இயல்பு:இருசாராரும் நாளடைவில் பெண் கொள்வதிலும் கொடுப்பதிலும் ஈடுபட்டுக் கலப்புறுதலும் உண்டு. இக்கலப்பினால் இருவேறுபட்ட பழக்க வழக்கங்கள், கலைகள், மத உணர்ச்சிகள் இன்ன பிறவும் கலப் புறுதலும் இயல்பே. இக்கலப்பு நாகரிகத்தினின்றும் தெளிவுபெற்ற புதியதோர் நாகரிகம் தோற்றம் எடுத்தலும் உண்டு. இஃது உலக இயற்கை இங்ஙனம் உலகின் பல பகுதிகளில் மக்கட் கலப்பும் நாகரிகக் கலப்பும் பண்டைக்காலத்திலேயே உண்டாயின.

இங்ஙனம் உலகத்தின் பல பகுதிகளில் வாழ்ந்த பண்டை மக்கள், தனித்தும் கலந்தும் பலவகை நாகரிகங்களை வளர்த்து வந்தனர். கற்கால மக்கள் செம்பைப் பயன்படுத்தத் தொடங்கியதும், கல்லால் செய்யப்பட்ட பல பொருள்களைப் புறக்கணித்து விட்டனர்; பயனற்ற மட்பாண்டங்களை விலக்கினர். இங்ஙனம்