பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டுகள் - தொழில்கள்- கலைகள்

167


வேட்டையாடல்

மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த முத்திரைகள் சிலவற்றில் உள்ள அடையாங்களாலும் அங்குக் கிடைத்த மான் கொம்புகளாலும் வேட்டை நாய்ப் பதுமைகளாலும் அம் மாநகரத்தார் வேட்டையில் விருப்பங் கொண்டனர் என்பதை அறியலாம். ஒரு முத்திரையில், ஒரு மரக்கிளையில் இரண்டு மலையாடுகளின் தலைகள் தொங்கவிடப்பட்டிருத்தலைக் காணலாம். மலையாடுகள் கீர்தர்மலைத் தொடரில் மிக்கிருந் தனவாதல் வேண்டும். வேறொரு முத்திரையில், ஒருவன் கையில் வில்லும் அம்பும் கொண்டு நிற்பது போலவும், அவன் அருகே நாயொன்று இரு விலங்கின் வாலைப் பற்றி இழுப்பது போலவும் சித்திரம் செதுக்கப்பட்டுள்ளது. சில முத்திரைகளில் மனிதர் மானையும் மலையாட்டையும் வேட்டையாடுவது போலவும் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வேட்டைக்கு உரிய செம்பு வெண்கல அம்பு முனைகள் அகப்பட்டுள்ளன. பறவைகளை வேட்டை ஆடுவோர் களிமண் உருண்டைகளைக் கவணில் வைத்து எறிந்தமைக்குரிய சான்றுகளும் காணப்படுகின்றன.

கோழி கெளதாரிச் சண்டைகள்

ஒரு முத்திரையில், இரண்டு காட்டுக் கோழிகள் சண்டை இடுதல் போலப் பொறிக்கப்பட்டுள்ளது. இதனால், இக்காலத்தில் நடைபெற்று வரும் மாட்டுச்சண்டை கோழிச் சண்டை முதலியன அக்காலத்தில் நடைபெற்றிருக்கலாம் என்று கருதுதல் தகும். கெளதாரிகளை வளர்ப்பவருடைய வீடுகளில் இருந்தனவாகச் சில கணிமண் கூண்டுகள் கிடைத்தன. வேறொரு மண்கூண்டில் கெளதாரி நுழைவது காட்டப்பட்டுள்ளது. ‘இன்று மொஹெஞ்சொ-தரோவைக் காண வரும் சிலர், தாம் வளர்க்கும் கெளதாரிகளைக் கூண்டுகளில் வைத்துக்கொண்டு வருகின்றனர். திருஷ்டி தோஷாதிகள் தாக்கா திருப்பதற்காக என்றே அக்கூண்டுகள் நீலநிற மணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. சொந்தக்காரர் அவற்றை அழைப்பதும்,