பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டுகள் - தொழில்கள்- கலைகள்

171


கன்னார வேலை

செம்பு, வெண்கலக்கருவிகளும் பிறபொருள்களும் நிரம்பக் கிடைத்தமை கொண்டு, சிந்து வெளியில் கன்னார வேலையும் சிறப்பாக நடைபெற்றமை அறியலாம். இக்கால அறிஞர்கள் பெரு வியப்புக்கொள்ளும்படி உருக்கி வார்க்கப்பட்ட சிறந்த வேலைப்படாமைந்த வெண்கல (நடனமாதின்) உருவச்சிலை ஒன்றே அக்கன்னாரப் பெருமக்களின் கைத்தொழிற் சிறப்பை உணர்த்தப் போதுமானது! மெல்லிய தகடுகளாக அமைந்துள்ள ஈட்டிகளும், சிறிய அழகிய கூர்மையான பற்களைக் கொண்ட இரம்பங்களும், கோடரிகளும், அரிவாள் மணைகளும். இடை வாள்களும், நீண்ட வாள்களும், அம்புகளும் பிறவும் அவர் தம் தொழிற் புலமையைத் தெற்றெனத் தெரிவிப்பனவாகும். மிகப் பலவாக-வகைவகையாகக் கிடைத்த மழித்தற் கத்திகள், மழித்தல் தகடுகள் ஆகியவற்றைக் காணும் இக்கால ஆராய்ச்சி அறிஞர், அக்காலக் கன்னாரது திறமையை எண்ணிப் பெருவியப்புக் கொள்கின்றனர் எனின், அவர்தம் பண்பட்ட தொழில் முறையை என்னெனப் புகழ்வது!

அரண்மனையுள் காளவாய்கள்

மொஹெஞ்சொ-தரோவில் அரண்மனை என்று கருதப்பட்ட பெரிய கட்டிடத்தின் திறந்தவெளியில் சிறியவடிவில் சில காளவாய்கள் அகப்பட்டன. அவை அரசாங்கத்தாருடைய படைக்கலங்களைச் செய்யவும், பழுது பார்க்கவும் பயன்பட்ட காளவாய்களாக இருக்கலாம். அவை வட்டமாக அமைந்தவை. - இத்தகைய காளவாய்கள் ‘கிஷ்’ நகரத்து அரண்மனையுள் கண்டெடுக்கப்பட்டன. அவை நீள் சதுரமாக அமைந்தவை. அவற்றின் காலம் கி.மு.2800 ஆகும்.[1]


  1. Mackay’s ‘Further Excavations at Mohenjo-Daro’,Vol. I p.172.