பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

மொஹெஞ்சொ - தரோ


முன் இருந்த பஞ்சு கிடைத்துள்ளது. அஃது இன்றைய இந்தியப் பஞ்சைப்போலவே இருக்கிறது. இப்பஞ்சைத்தான் பாபிலோனியர் சிந்து[1] என்றும், கிரேக்கர் சின்டன் என்றும் வழங்கி வந்தனர். செல்வர்கள் சித்திர வேலைப்பாடமைந்த ஆடைகளை அணிந்து வந்தனர்; பூத் தையல்களைக் கொண்ட மேலாடைகளைப் போர்த்து வந்தனர் என்பதைச் சில வடிவங்களைக் கொண்டே கூறலாம்.

தையலும் பின்னலும்

இவை இரண்டும் அங்கு இருந்தன என்பது மேலே கூறப்பட்டது. இவ்வேலைகட்கு உரிய ஊசிகள் பல கிடைத்துள்ளன. அவை செப்பு, வெண்கலம், எலும்பு, தந்தம், தங்கம் இவற்றால் செய்யப்பட்டவை. அவற்றுள் சில நூல் கோத்துத் தைப்பதற்கு உதவும் ஊசிகள்; சில பூத் தையல்கள் போடவும், சித்திரங்கள் பின்னவும் பயன்பட்டவையாகக் காணப்படுகின்றன.

தந்த வேலை

மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த பொருள்களுள் இரண்டு யானைக் கோடுகள் குறிப்பிடத்தக்கவை. ஒர் அழகிய பாத்திரத்தின் அடிப்புறத்திற்கோ அன்றி மேற்புறத்திற்கோ பயன்படுத்தப்பட்ட தந்தத் தகடு ஒன்று கிடைத்துள்ளது. அது சில அழகிய வேலைப்பாடு களைக் கொண்டுள்ளது. தந்தப் பாத்திரங்கள் இருந்திருக்கலாம்; பெரிய பாத்திரங்களை அழகு செய்யத் தந்தத் தகடுகளைப் பயன்படுத்தி இருக்கலாம்: தந்த ஊசிகள், தந்தக் கதிர்கள் முதலியன கிடைத்துள்ளதைக் கொண்டும் முத்திரைகள் பலவற்றில் கோடுள்ள யானைகள் காணப்படலைக்கொண்டும், சிந்துவெளியில் யானைகள் புதியன அல்ல என்பதும் தந்தத் தொழில் நடைபெற்று இருக்கலாம் என்றும் கூறலாம்,[2] தந்தப் பொருள்கள் சில சுமேரியாவிற் காணப்படு


  1. திராவிட மொழிகளுள் ஒன்றாய் கன்னடத்தில் ‘சிந்து’ என்பது ஆடையைக் குறித்தல் இங்குக் கருதத்தகும்.
  2. Mackay’s ‘The Indus Civilization’, 172.