பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டுகள் - தொழில்கள்- கலைகள்

181


மூலம் கரையோரமாகவே சென்றும் கடல் வாணிபம் - ஆகிய இரண்டையும் வெற்றி பெற நடத்தி வந்தனர் என்பது முற்பகுதியில் விளக்கமுறக் கூறப்பட்டது. அவர்கள் தங்கள் நாட்டுப் பொருள்களையும் கலையுணர்வையும் பிற நாட்டினர்க்குக் கொடுத்து, அவர் தம் பொருள்களையும் கலையுணர்வையும் பெற்று, வாணிபத்தையும் கலையுணர்வையும் வளர்த்து வந்தனர். ‘திரைகடல் ஒடியும் திரவியம் தேடு’ என்பதற்கு அப்பெருமக்களே சான்றாவர். அவர்கள் இந்தியாவின் பல பகுதியிலிருந்தும் தமக்கு வேண்டிய பொருள்களைப் பெற்று உள்நாட்டு வாணிபத்தையும் வளர்த்து வந்தனர்.

சிற்பக் கலை

சிந்து வெளி மக்கள் சிற்பக் கலையைத் தோற்றுவித்தவர் என்னல் தவறாகாது. மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த சுண்ணாம்புக்கல் கொண்டு செய்யப்பட்டிருந்த சிலை ஒன்று அறிஞர் கவனத்தை ஈர்த்தது. அவ்வுருவம் யோகியின் உருவம் என்றும், சமயத் தலைவர் உருவம் என்றும் அறிஞர் பலவாறு கருதுகின்றனர். அவ்வுருவம் சித்திரத் தையலைக்கொண்ட போர்வை ஒன்றைப் போர்த்துள்ளது; மீசையின்றித் தாடியை மட்டும் வைத்துள்ளது; அத்தாடி ஒழுங்குபெற அமைக்கப்பட்டுள்ளது. தலைமயிர் ஒழுங்காகச் சீவப்பெற்று, வட்டப் பதக்கத்துடன் கூடிய தலையணியால் அழுத்தப்பட்டுள்ளது.இந்த அமைப்பு முறை கண்கவர் வனப்பினது.

ஹரப்பாவில் கிடைத்துள்ள கற்சிலைகள் சிந்து வெளி மக்களின் சிற்பக்கலை அறிவைத் திறம்படக் காட்டுவனவாம். அவை வியக்கத்தக்க முறையில் செய்யப்பட்டுள்ளன. கைகள் தனியே செய்து இணைப்பதற்கு ஏற்றவாறு அச்சிலைகளில் துளைகள் காணப்படுகின்றன; அங்ஙனமே தலைகளும் இணைக்கப்படும் போலும் கற்களில் இணைப்பு வேலையைச் செய்யத் துணிந்த அம்மக்களின் கலையறிவை என்னென்பது! இவ்வாடவர் சிலைகள் மணற் கல்லாலும் பழுப்பு நிறக் கல்லாலும் செய்யப்பட்டுள்ளன. இக்கற்கள் சிந்து வெளியிற்