பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

மொஹெஞ்சொ - தரோ


கிடைப்பன அல்ல; வெளி இடங்களிலிருந்தே கொண்டுவரப் பட்டவை. இக்கற்களைப் பிற்கால இந்தியர் இன்றளவும் சிலைகட்குப் பயன்படுத்த அறிந்திலர் என்பது கவனிக்கத் தக்கது.

சிற்பக் கலை கிரேக்கரிடமிருந்துதான் இந்தியாவிற்கு வந்தது என்று இதுகாறும் கூறி வந்தது இன்று தவறாகிவிட்டது. அவர்தம் கலை தோன்றற்கு முன்னரே சிந்துவெளி மக்கள் சிற்பக் கலையைத் தோற்றுவித்தனராதல் வேண்டும். ‘இந்தியச் சிற்பக் கலை இந்தியாவிற்கே உரியது’ என்று சர்ஜான் மார்ஷல் கூறியுள்ளது கவனிக்கத் தக்கது.[1]

வெண்கலத்தாற் செய்யப்பட்ட நடனமாதின் உருவம் ஒன்றும் சிந்துவெளி மக்களின் சிற்ப அறிவைச் சிறப்புறக் காட்டுவதாகும். அதனைப்பற்றி வியந்து எழுதாத அறிஞர் இலர் எனின், அதன் வேலைப்பாட்டுச் சிறப்பை என்னென்பது! வெண்கல வார்ப்படங் கொண்டு செய்யப்பட்ட அவ்வுருவம் வழவழப்பாகவும் ஒழுங்காகவும் அமைந்துள்ளது வியப்புக்கு உரியதேயாகும். சில உருவச் சிலைகள் நடனம் செய்வத்ற்கு ஏற்றவாறு நிற்பனபோலச் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வோர் உருவமும் இடது காலைத் தூக்கி வலது கால்மீது நின்று நடனம் செய்வது போல அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலைகள், சிவபெருமானது பிற்கால நடனத்திற்கு தோற்றுவாய் ஆகலாம் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து.

சிந்து வெளியிற் கிடைத்த விலங்குப் படிவங்களைக் கொண்டும் அம்மக்களது சிற்ப அறிவை உணரலாம்; ஒரு குரங்கு தன் குட்டியுடன் உட்கார்ந்திருப்பது போலச் செய்யப்பட் டுள்ளது. வேறு ஒரு குரங்கு தன்முழங்கால்கள் மீது கைகளை ஊன்றிக்கொண்டு உட்கார்ந்திருப்பது போலச் செய்யப்பட்டுள்ளது. இங்ஙனம் செய்யப்பட்ட உருவங்களில் கற்களும் சிப்பிகளும் கண்களாக வைத்துப்பதிக்கப்பட்டுள்ளன. இம்முறை எகிப்திலும்


  1. M.S. Vats’s ‘Excavations at Harappa’, Vol. I. pp. 76, Vol. II. PI. LXXX, LXXXI.