பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமய நிலை

189


போலவும் காணப்படுகிறது. இன்றளவும் சிவபெருமான் மனைவியாரான உமையம்மையார் பார்வதி, துர்க்கை, காளி எனப் பல உருவங்களில் வழிபடப்படுதலையும், பின் இரண்டு உருவங்களும் அச்சமூட்டுவனவாக இருத்தலையும் சிந்து வெளிப் பெண் தெய்வ உருவங்களோடு ஒப்பிட்டுக் காண, தரைப்பெண் வணக்கம் நாளடைவில் சக்தி வணக்கமாக மாறியதென்பதை நன்கு உணரலாம்.[1]

இன்று கிராமந்தோறும் காணப்படும் கிராம தேவதைகள் அனைத்தும் தரைப் பெண்ணின் பிரதிநிதிகளே என்னல் பொருந்தும். இத்தெய்வங்கள் அனைத்தும் கன்னித் தன்மை வாய்ந்தவை ஆகும். இவற்றுட் பல பிறகு எக்காரணம் கொண்டோ, ஆண் தெய்வங்களுடன் இணைக்கப்பட்டுவிட்டன. அப்பொழுது தான் ‘சக்தி வணக்கம்’ ஏற்பட்டது. தரைப் பெண் வணக்கம் இன்றளவும் கொண்டர்களிடம் இருத்தலும், அவர்கள் நிலமகளை (பூமி தேவியை)த் தரைப் பெண்[2] என்றே கூறுதலும் காண, இது வட இந்தியாவில் இருந்த பழந் தமிழர் வழிபாடு என்பதை நன்குணரலாம். தரைப் பெண் நல்ல விளைச்சலை நல்குந் தெய்வம் என்பது கொண்டர் கொள்கை. அக்கொள்கையே சிந்து வெளி மக்களிடத்தும் இருந்ததென்பது வெளியாம்.

கவின் பெறு கற்பனை

தரையைத் தாயாக உருவகப்படுத்தி, அது நமக்காக அளிக்கும் பொருள்களைக் கருவுயிர்ப்பதாகக் காட்டும் சித்திரம் ஒன்று சிந்துவெளியிற் கிடைத்த முத்திரை ஒன்றில் காணப் படுகிறது. ஒரு பெண் கருவுயிர்க்கும் நிலையில் தலைகீழாய் நிற்கிறாள்; அவளது கருவிலிருந்து செடி ஒன்று வெளிப்படுகிறது. குப்தர் காலத்திய இத்தகைய ஓவியங்கள் ஐக்கிய மண்டிலத்தில் உள்ள ‘பீதா’வில் கிடைத்துள்ளன.


  1. Monier William’s ‘The Original Inhabitants of India, p. 574.
  2. Thurston’s ‘Castes and Tribes of Southern India’, Vol. 3. p.372.