பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

மொஹெஞ்சொ - தரோ


நரபலி உண்டா?

ஒரு முத்திரையில் ஒருவன் வாளேந்தி நிற்பதுபோலவும் அவனுக்கு அடியில் ஒரு பெண் முழங்காற் படியிட்டு இருப்பது போலவும் காணப்படுதலை நோக்கி, ஆராய்ச்சியாளர், அக்காலத்தில் தரைப் பெண்ணுக்கு நரபலி கொடுக்கும் வழக்கம் இருந்ததோ என்று ஐயுறுகின்றனர். ஆனால், இவ்வாராய்ச்சிக்கு முன்னரே அறிஞர் பலர், பண்டை இந்தியாவில் நரபலி இருந்திருத்தல் வேண்டும் என்று தம் ஆராய்ச்சி நூல்களில் வரைந்துள்ளனர்.[1] இதே பழக்கம் ஆஸ்ட்ரேலிய இனத்தவரான கொண்டர்களிடமும் 80 ஆண்டுகட்கு முன் வரை இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. வேறு ஒரு முத்திரையில், இறைவி முன் ஒருவன் வெள்ளாடு ஒன்றைப் பிடித்துக்கொண்டு நிற்கிறான்; பலர் வரிசையாக வழிபட நிற்கின்றனர். இதனால், அக்கால மக்கள் விலங்குகளைப் பலியிடும் பழக்கமுடையவ்ர் என்பது புலனாகும்.

தலையில் விசிரிப் பாகை

தரைப் பெண் உருவங்கள் அனைத்தும் நகைகள் நிரம்பப் பூண்டவையாகவே காணப்படுகின்றன. அவற்றின் தலைமீது விசிறி போன்ற பாகைகள் காணப்படுகின்றன. அரையில் மிகச் சிறிய துணி சுற்றப்பட்டுள்ளது.

சிவ வணக்கம்

சிந்து வெளி மக்கள் லிங்க வணக்கத்தினர் என்பதை, அங்குக் கிடைத்த பல லிங்கங்களைக் கொண்டு அழுத்தமாகக் கூறலாம். இடக்காலைத் தூக்கி ஆடும் நடராசரது உருவம் கிடைத்துள்ளது. ஒரு முத்திரையில், மூன்றுமுகங்களைக் கொண்டமனித உருவம் ஒன்று, கால்களை மடக்கி இரு குதிகால்களும் ஒன்று சேர்ந்து காற் பெரு விரல்கள் கீழ்நோக்கி உள்ளவாறு ஆசனமிட்டு யோகத்தில் அமர்ந்திருப்பதுபோலக் காணப்படுகின்றது. மார்பில் முக்கோண வடிவப் பதக்கங்கள் காணப்படுகின்றன.


  1. Barth’s ‘The Religion of India’, p.204.