பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

மொஹெஞ்சொ - தரோ


மேற்பட்டவை கிடைத்துள்ளன. பண்டை மக்கள் சிறிய லிங்கங்களைத் தாயித்துகள் போலக் கழுத்திலோ கையிலோ கட்டியிருந்தனராதல் வேண்டும்:[1] இவையன்றி முத்திரைகளும், செம்பு வில்லைகள் போன்றனவும் அணியப்பட்டு வந்தன.

புத்தர் பெருமானா? கண்ணபிரானா?

முத்திரை ஒன்றில், ஒர் உருவம் உட்கார்ந்திருப்பது போலவும் இதன் இருபுறங்களிலும் வரிசையாக மக்கள் நின்று வணங்குவது போலவும் பொறிக்கப்பட்டுள்ளன. பக்தர்தம் தலைமீது படம் - விரித்தாடும் பாம்பு போன்ற தலையணிகள் காணப்படுகின்றன. இம்முத்திரையில் உள்ள காட்சி, ‘சாஞ்சி, பர்ஹத்’ என்னும் இடங்களில் புத்தர் பெருமானை நாக வம்சத்து அரசர்கள் வணங்குதல் போலக் காணப்படும் ஒவியங்களை நினைப்பூட்டுகிறது.[2] கண்ணபிரான், கலியன் என்னும் நாக அரசனை வென்ற பின், அவனும் அவனைச் சேர்ந்தவரும் கண்ணனை வழிபடும் காட்சியை இம்முத்திரைகளில் உள்ள சித்திரம் குறிக்கிறது.[3]


  1. இராவணன்.தான் சென்ற இடமெல்லாம் சிவலிங்கத்தைத் தூக்கிச் சென்றான் என்பது ஈண்டுக் கருதத்தக்கது.
  2. K.N.Dikshit’s ‘Pre-historic Civilization of the H. V.’ p. 35.
  3. P.Mitra’s ‘Pre-historic India p 275. “மாயோன் மேய காடுறை யுலகமும் என்பது தொல்காப்பியம். முல்லை நில மக்கள் கண்ணனைத் தெய்வமாக வழிபட்டனர். இவ்வழிபாடு புதிய கற்கால காலத்திலிருந்தே பண்டை மக்களால் கொள்ளப்பட்டதாகும். பாரத காலத்துக் கிருஷ்ணனுக்கு முன்னரே வேத காலத்தில் யமுனைக் கரையில் ஆரியரை எதிர்த்த கிருஷ்ணன் (கறுப்பன்) ஒருவன் இருந்தான். அவனைச் சேர்ந்த வீரர் பல்லாயிரவர் ஆவர். கிருஷ்ணனுக்கு ஜன்ம விரோதி ஆரியர் கடவுளான இந்திரன். இவ்விருவர் பகைமையே பிற்கால புராணங்களில் பல கதைகளின் வடிவில் காணப்படுகிறது. கிருஷ்ணன் ஆரியக் கடவுள் அல்லன், அவன் வேதமொழிகளிடம் வெறுப்புக் கொண்டவன். வேதத்தின் மலர்ந்த வார்த்தைகட்கு இடங் கொடாதே’ என்று அர்ச்சுனனை எச்சரித்தல் பகவத் கிதையிற் காண்க” - PT.Srinivasa Iyengar’s ‘Stone Age in India’, p. 49-51.