பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமய நிலை

193


கொம்புள்ள தெய்வங்கள்

பசுபதியின் தலையில் காணப்பட்ட கொம்புகள் போல வேறுபல உருவங்களின் தலைகளில் கொம்புகள் காணப் படுகின்றன. வேத காலத்திலும் தாச, வேதாளம், சுஷ்னே முதலிய தெய்வங்கள் கொம்புடையனவாகக் கூறப்பட்டுள. அரசர் புரோகிதர் முதலிய உயர்நிலை மக்கள் தம் மேம்பாடு தோன்றக் கொம்புகளையுடைய கவசங்களைத் தலையில் அணிதல் பண்டை மரபு. சுமேரியாவிலும் பாபிலோனியாவிலும் இத்தகைய கவசங்கள் பல கிடைத்தன. இத்தகைய கவசங்கள் சிந்து வெளியிலும் கிடைத்துள்ளன.[1]

நான்கு கைத் தெய்வங்கள்

சிந்து வெளியில் நாற்கை உருவ ஒவியங்கள் சில சிதைந்து காணப்படுகின்றன. ‘இத்தகைய நாற்கை மனித உருவங்களே, பிற்காலத்தில் ஆரியர் பிரம்மா, விஷ்ணு, ருத்திரர்களை நாற்கையினராகக் குறிக்கப் பயன்பட்டன ஆகலாம்’ என்று ஆர்.பி. சண்டா கூறுகிறார்.

சமண சமயமும் பண்டையதோ?

சில முத்திரைகளில் அறுவர் நின்று யோகம் செய்தல் போலத் தீட்டப்பட்டுள்ள ஒவியங்களை நோக்கிச் சண்டா என்பவர், “இவை சமண யோகிகளைப்போல இருக்கின்றன; வடமதுரைப் பொருட்காட்சிச்சாலையில் உள்ள கி.பி.இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண தேவர் சிலைகளை ஒத்துக் காணப்படுகின்றன. நிற்கும் நிலையில் யோகம் புரிதல் சமணர்க்கே சிறப்பானது. எருது சமணரது அடையாளக்குறி ஆகும். சில முத்திரைகளில் யோகியின் முன்புறம் எருது இருத்தல் குறிப்பிடத் தக்கது. ஆகவே, இவ்வுருவம் ரிஷப தேவரைக் குறிப்பதாகலாம்.


  1. கொண்டரும் கோயிகளும் (கோதாவரி, மத்திய மாகாணம் ஒரிஸ்ஸா முதலிய இடங்களில் உள்ள மலைவாணர்) இன்றும் தம் நடனத்தின்போது தலைப்பாகைகளில் எருமைக் கொம்புகளைச் செருகி வைத்துக் கொண்டு ஆடுதல் மரபு - Thurston’s ‘Castes and Tribes ofS. India’, Vo!. IV, p.61