பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதைபொருள் ஆராய்ச்சி

5


என்னும் கிரேக்க கவிஞர் எழுதியுள்ள ‘இலியட்’ என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ட்ராய் நகரம் எங்கே? அப்பொன்னகரைக் கண்டு, அதன் அமைப்பையும் பிறவற்றையும் அறியின், அப்பழங்கால நகரத்தில் வாழ்ந்த மக்களைப்பற்றிய பல செய்திகளை அறிதல் கூடுமன்றோ? என்று அறிவுடையவர் எண்ணுதல் இயல்பேயாகும். நாசரேத்தூர் அடிகள் வாழ்ந்து பல அற்புதச் செயல்களைச் செய்த இடங்கள் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், அவ்விடங்கள் இன்று காணப்படுகின்றில. அவை மண்மூடி இருத்தல் வேண்டும். அங்குச் சென்று மண்மேடுகளைக் கண்டறிந்து, அவற்றைத் தோண்டி, உண்மையை உணர்தல் வேண்டும் என்னும் அவா அறிஞர் உள்ளத்தே வேரூன்றுதல் இயல்பு தானே!

இந்திய நாட்டுப் பழைய நூல்களில் கூறப்பட்டுள்ள நாலந்தா, தக்ஷசீலம், கோசாம்பி, பாடலிபுரம், கொற்கை, காயல், காவிரிப்பூம்பட்டினம், வஞ்சிமாநகரம், உறையூர் முதலிய வரலாற்றுச் சிறப்புடைய நகரங்களை அகழ்ந்து கண்டு, நம் முன்னோரைப்பற்றிய செய்திகளை அறிந்து இன்புற நாம் விரும்புதல் இயல்பன்றோ? “திராவிட மொழிகளுள் ஒன்றான ‘கோண்ட்’ என்பது மத்திய மாகாணத்திலும் ‘கூய்’ என்பது சென்னை மாகாணத்தின் வட கோடியிலும், ‘குருக்’ என்பதும் ‘இராஜ் மஹால்’ என்பதும் வங்காள மாகாணத்திலும், பல திராவிடச் சொற்களையுடைய ‘ப்ராஹி’ என்பது பலுசிஸ்தானத்திலும் இருத்தலைக் காணின், வட இந்தியாவில் மிகப் பழைய காலத்தில் மூலத் திராவிடமொழி பேசப்பட்டதாதல் வேண்டும். ப்ராஹியில் உள்ள திராவிடச் சொற்களை நோக்குங்கால், பலுசிஸ்தானத்திற்கு அண்மையில் திராவிடர் இருந்திருத்தல் வேண்டும் என்னும் எண்ணம் தோன்றுகிறது”[1] என்பதைப் படிக்கும் பொழுது, திராவிட மக்களாகிய நாம், நம் முன்னோர் சிந்து வெளியில்


  1. 1. Dr.Caldwells ‘Comparative Grammar of the Dravidian Languages’, р. 633.