பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமய நிலை

195


தலைகள் ஆகும். ஒன்று புலித்தலை, மற்ற இரண்டு சிதைந்து காணப்படுகின்றன. அவை ஆறும் வட்டமாகக் கதிரவன் கதிர்களை ஒத்திருக்குமாறு ஒட்ட வைக்கப்பட்டு இருக்கின்றன. மற்றொரு தாயித்தில் ஒர் எருதுத்தலை ஆறு கதிர்களுடன் காணப்படுகிறது. இவ்வாறு காணப்படுவது கதிரவனைக் குறிப்பதாகும் என்று அறிஞர் கூறுகின்றனர்.

கலப்பு உருவங்கள்

சிந்து வெளி முத்திரைகளில் மனித விலங்குகள் பல காணப்படுகின்றன. ஓர் உருவம் மனிதத் தலையுடனும் யானை உடலுடனும் எருதின் கொம்புகளுடனும் புலியின் கால்களுடனும் வாலுடனும் காணப்படுகிறது. இவ்வுருவம், பல தெய்வங்களை - ஒரே விலங்கு உருவமாகச் சேர்த்துக் காட்டச் செய்யப்பட்டதாதல் வேண்டும். எருதுக் கொம்புகளுடன் கூடிய மனித உருவம் ஒன்று காணப்படுகிறது. இம்மனிதவுருவின் கால்கள் எருதின் கால்கள் போல் உள. பின்புறம் எருதின் வால் போன்று ஒன்று காணப்படுகின்றது. இம்மனித உருவம் ஒற்றைக் கொம்புடைய புலியோடு போர் புரிவதாகக் காட்டப்பட்டுள்ளது. இத்தகைய விநோத உருவங்கள் சுமேரியாவில் நிரம்பக் கிடைத்துள்ளன; இம்மனிதர் ‘தெய்வ சக்தி வாய்ந்தவர் என்பதையும், இவர் அடிக்கடி கடவுளராகக் கருதப்பட்டவருடன் போர் தொடுத்துக் கொண்டிருந்தனர் என்பதையும் இவை தெரிவிக்கின்றனபோலும்! மனிதத்தலை, அரை உருவம் ஆடு, பாதி உருவம் எருது, பாதி உருவம் யானை போன்ற மனித விலங்குகளின் உருவங்கள் பல முத்திரைகளிற் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு மனிதன் புலிகளோடு போர் புரிவது சில முத்திரைகளிற் காணப்படுகிறது. எகிப்திலும் சுமேரியாவிலும் சிங்கங்களோடு போர் புரிவது காட்டப்பட்டுள்ளது. ஒரு முத்திரையில் பெண்ணும் புலியும் சேர்ந்த உருவம் ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. இது. புலியை ஒருதேவதையாகக்