பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமய நிலை

197


பிரதிநிதிகளாகவோ அடையாளமாகவோ எண்ணி வழிபட்டு வந்தனர். ஹரப்பாவில் கிடைத்த முத்திரை ஒன்றில், ஒரு விலங்கு உட்கார்ந்திருக்கிறது; அதன் முன்னர் நின்று ஒர் ஆடவன் கூப்பிய கரங்களுடன் அதனை வழிபடுகிறான். நிற்க, சிந்துவெளி மக்கள் வெள்ளாட்டுக் கொம்பைச் சிறப்புடையதாகக் கருதினர் போலும்! ஆண் தெய்வத் தலை மீதும் புலித் தேவதைகள் தலைமீதும் வெள்ளாட்டுக் கொம்பு காணப்படுகிறது.

நாக வணக்கம்

சிந்துவெளி நாகரிக காலத்திலிருந்து இன்றளவும் நாக வணக்கம் இருந்து வருகிறது. களிமண் தாயித்து ஒன்றில், முக்காலி ஒன்றன்மீது பால் கிண்ணம் இருக்கிறது; அதன் எதிரில் நாகம் ஒன்று இருக்கிறது. இதுவன்றிச் சில முத்திரைகளில் கொம்பு முளைத்த பாம்புகள் பொறிக்கப்பட்டுள்ளன.

புறா வணக்கம்

மண்ணாற் செய்யப்பட்ட புறாக்கள் பல கிடைத்துள்ளன. அவை மெசபொட்டேமியாவில் கிடைத்தவற்றையே பெரிதும் ஒத்துள்ளன. தரைப்பெண் படிவத்தின் தலைமீது இரண்டு புறாக்கள் நிற்பதுபோலச் செய்யப்பட்டுள்ளன. இச்சிலைகள் எகிப்திலும் கிரீட்தீவிலும் கிடைத்துள்ளன. எனவே, பண்டை நாகரிக நாடுகளில் எல்லாம் தரைப்பெண்தேவதையுடன் புறாக்கள் இணைக்கப் பெற்று வழிபடப் பெற்றன என்பது தெரிகிறது.

கருட வணக்கம்

தாயித்து ஒன்றில் கருடப் பறவை பறப்பது போலப் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் கால்கள் மனிதர் கால்கள் போலக் காணப்படுகின்றன. இவ்வுருவத்தைக் கொண்ட