பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

மொஹெஞ்சொ - தரோ


வாழ்ந்திருத்தல் வேண்டும் என்று எண்ணுகிறோம். உடனே, அவர்கள் வாழ்ந்த இடங்கள் அகப்படாவோ? அவை என்ன வாயின? மண்ணுள் மறைந்தனவோ? அவர்தம் பழக்க வழக்கங்கள் நம்மிடம் இன்று இருப்பவைதாமா? அவற்றை அறிய வேண்டுமே எனப் பலவாறு புத்துணர்ச்சி பெறுகின்றோம். இவ்வுணர்ச்சி தோன்றற்கு அறிஞர்கள் அன்புடன் எழுதி வைத்துள்ள அரிய நூல்களே காரணமாகும்.

நாம் இன்று கொண்டுள்ள பழக்க வழக்கங்கள் திடீரென வந்திரா. அவற்றுள் சில மிகப் பழைய காலந்தொட்டே வந்திருத்தல் வேண்டும். ஒரு வகை நாகரிகம் தோன்றும் பொழுது அஃது, அதற்கு முற்பட்ட நாகரிகத்தின் ஒரு பகுதியைத் தன்னகத்துக் கொண்டே தோற்றமெடுக்கும். இந்த உண்மை, வரலாற்றின் உயிர் நாடியாகும். வரலாறு என்பது என்றும் தொடர்புற்று வரும் இயக்கமாகும். ‘இத்துடன் எல்லாம் முடிவடைந்துவிட்டன; இனிநம்மைச்சார்வன எவையும் இல்லை’ என்று எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் கூற, உண்மை வரலாறு இடம்தராது. இன்றைய ஐரோப்பா, பழைய உரோமப்பேரரசிலிருந்து தோன்றியதாகும். அந்த உரோமப் பேரரசும் அலெக்ஸாண்டரது பெரு வெற்றியிலிருந்து பிறந்ததாகும். அலெக்ஸாண்டரது பேரவா, பாரசீக மன்னர்களின் தனியரசு உணர்ச்சியினின்றும் பிறந்ததாகும். பாரசீக வேந்தர்கள் அதனை ஆசிரியர்பால் கற்றுக்கொண்டனர். இங்ஙனம் உள்ள பல உண்மைகளைக் காணும் போது, வரலாறு என்றும் தொடர்புடையதே என்னும் உண்மைச் செய்தியை உள்ளவாறு உணரலாம்”.[1]

இவ்வுணர்ச்சி நம் உள்ளத்தே எழுமாயின், நமது வரலாற்றுத் தொடர்பைக் கண்டறிய நாம் அவாவி நிற்றல் இயல்பே ஆகும். அவா நாளடைவில் செயலில் முடிகின்றது. அஃதாவது, புதைந்து


  1. 1. Patrick Carleton’s ‘Buried Empires’ p. 11.