பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடுதலும் சுடுதலும்

207


புதைக்கப்பட்டன. இப்பழக்கம் சுமேரியாவிலும் எகிப்திலும் சிறப்பாக இருந்து வந்தது. இதே பழக்கம், புதுக்கோட்டை, ஆதிச்சநல்லூர் முதலிய தமிழ்நாட்டுப் பகுதிகளிற் கிடைத்த தாழிகளைக் கொண்டு, தமிழ்நாட்டிலும் இருந்ததெனத் துணிந்து கூறலாம்.

ஈரானியர் பழக்கம்

மேல் அடுக்குகளிற் கிடைத்த சவக் குழியில் தனித்தனி உடற்பகுதிகளும் எலும்புகளும் புதைக்கப்பட்டன போலும்! இங்ஙனம் உடற்பகுதிகளைப் புதைத்துவந்தவர் முன் சொல்லப் பட்டவரினும் வேறானவராதல் வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. இங்ஙனம் உடற்பகுதிகள் புதைக்கப்பட்ட மட்பாண்டங்கள் ஹரப்பாவில் நூற்றுக்கு மேலாகக் கிடைத்துள்ளன. ஆயின், இவற்றில் உள்ள மண்டை ஒடுகளையும் பிற எலும்புகளையும் காண்கையில், உடற் பகுதிகளைக் கழுகு, நரி முதலியவற்றிற்குப் போட்டுச் சதைப்பகுதிகள் தின்னப்பட்டபிறகு, எலும்புகளை மட்பாண்டங்களில் இட்டுப் புதைத்து வந்தனர் என்பது தெரிகிறது. இப்பழக்கம் பாரசீகரிடமே செல்வாக்குப் பெற்றதாதலின், ஈரானியர் ஹரப்பாவில் குடியேறி இருந்தனர்; அந்நகர மக்களுள் ஈரானியரும் ஒரு பகுதியினராக இருந்தனர் என்பதை அறியலாம்.

தாழிகள் மீது ஒவியங்கள்

இத்தாழிகள் எல்லாம் ஒவியங்கள் தீட்டப்பெற்றன. ஒவ்வொன்றிலும் விதவிதமான ஒவியங்கள் காணப்படுகின்றன. ஒரு தாழியின் கழுத்தருகில் கருடப் பறவைகள்[1] இரண்டு வரிசைகளில் பறப்பன போலத் தீட்டப்பட்டுள்ளன. அவ்வரிசைகட்கு இடையே இலைக்கொத்துடன் காணப்படும் தொட்டிகள் அணியணியாக வைக்கப்பட்டுள்ளன. பிற தாழிகள் மீது, செம்படவன் வலை


  1. இன்றும் கருடனை வழிபடல் கவனிக்கத்தக்கது. இது பண்டைக் காலத்திருந்து இன்றளவும் தொடர்ந்து வரும் வழிபாடாகும்.