பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

மொஹெஞ்சொ - தரோ


பெற்ற மண் அப்பங்கள் கிடைத்ததைக் குறிப்பதாகக் கூறலாம். பல தாழிகளில் தங்கநகைகள் அகப்பட்டன: நவரத்தினங்கள் கிடைத்தன. இங்ஙனம் தாழிகளில் இறந்தார் அணிகளைப் புதைத்தல் பண்டை மேற்குப்புற நாடுகளிலும் இருந்துவந்த பழக்கமே ஆகும்.

உடன் இறக்கும் வழக்கம்

ஒரு பிணைக் குழியிற் கிடைத்த முத்திரை ஒன்றில், கட்டில்மீது மங்கை ஒருத்தி சாய்ந்துகொண்டு இருப்பது போல, உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இதனால் இறந்த ஆடவனுடக்குரிய மனைவி கணவனுடன் இறக்கும் வழக்கம் அக் காலத்தில் இருந்திருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர்; ‘இறந்தவர் அடுத்த வாழ்க்கையில் இப்பிறவியில் இருந்தவாறே இருக்க விழைந்தனர்; அவ்விழைவாற்றான் மனைவியும் உடன் இறந்தவளாதல் வேண்டும்[1] என்று எண்ணுகின்றனர்.

முடிவு

மொஹெஞ்சொ-தரோ, ஹரப்பா முதலியன சிறந்த நாகரிகமும் செல்வப் பெருக்கமும் உடைய நகரங்கள்; வாணிபப் புகழ்பெற்ற நகரங்கள். ஆதலின், அவற்றில் பல நாட்டு மக்கள் குடிபுகுந்திருந்தனர். அவரவர் தத்தம் நாட்டுப் பழக்கத்திற்கேற்ப இறந்தார் உடலைப் புதைத்தும்,


  1. 'சாதல் அஞ்சேன்: அஞ்சுவல் சாவில்
    பிறப்புப்பிறி தாகுவ தாயின்
    மறக்குவென் கொல்என் காதலன் எனவே

    என வரும் நற்றிணை அடிகளும்,

    ‘இம்மை மாறி மறுமை ஆகினும்
    நீயா கியரெங் கணைவனை:
    யானா கியர்நின் நெஞ்சுநேர் பவளே”

    என வரும் குறுந்தொகை அடிகளும்,

    ‘காதலர் இறப்பின்...’ என வரும் மணிமேகலை அடிகளும் இங்குச் சிந்திக்கற்பாலன.