பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

மொஹெஞ்சொ - தரோ


பஞ்சாப் மண்டிலங்களில் நன்றாகப் பரவி இருந்த பண்பு முன்னரே விளக்கப்பட்டுள்ளது. எனவே, பெளத்தர்கள் காலம் வரை சிந்து வெளி நாகரிகம் தொடர்ந்து வந்ததெனக்கோடல் தவறாகாது. மேலும், புதிதாக வந்த ஆரியர், நீண்ட நாளாக நாட்டில் நிலைபெற்றிருந்த பண்டைக் குடிகளின் நாகரிகத்தையோ பிறவற்றையோ பிரமாதமாக மாற்றிவிட்டனர் என்று கூறவும் இதுகாறும் சான்று கிடைத்திலது. ஆரியர் தெய்வங்களான இந்திரன், அக்நி முதலியனவும் அவர்தம் மதத்தின் உயிர் நாடியான வேள்வி இயற்றலும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன. இன்றளவும் இந்துமதத்தில் உச்ச நிலையில் இருப்பன சிந்துவெளித்தெய்வங்களே ஆகும்; கோடிக்கணக்கான இந்துக்களிடம் இருப்பவை சிந்துவெளி மக்கள் கையாண்ட தெய்வ வணக்கமே யாகும். ஆதலின், ஆரியர் வருகையால், சிந்து வெளி நாகரிகத்திற்கு மாறாகப் பெரிய புரட்சி ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை. போதிய எழுத்துச் சாதனங்கள் இன்மையால், அசோகனுக்கு முற்பட்டவர்கள் கற்கம்பங்களில் எழுத்துகள் பொறிக்கவில்லை. பொறிக்க வேண்டிய தேவை ஏற்படவும் இல்லை. ஆகவே, அசோகனுக்கு முற்பட்ட எழுத்துகள் நமக்குக் கிடைத்தில. ஒருவேளை, அவை மண்ணுள் மறைப்புண்டு இருப்பினும், இருக்கலாம்; நாளடைவில் வெளிப்படலாம். அவை எங்ஙனமாயினும், ‘அசோகனுடைய பிராமி எழுத்துகள் சிந்துவெளி எழுத்துக் குறிகளிலிருந்து தோன்றின என்பதில் ஐயமே. இல்லை’ என்று பேராசிரியர் லாங்டன் கருதுகிறார். ‘அவரது கருத்துச் சரியே’ என்று டாக்டர் ஹன்ட்டரும் அறிவிக்கின்றார்.

எழுத்துகள்

சிந்துவெளி எழுத்துகளைச் சோதிக்கையில், தெளிவான வேறுபட்ட 234 எழுத்துக்குறிகள் காணப்படுகின்றன. பிராமியில் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஓ, என்னும் எட்டு உயிர் எழுத்துகளும், 33 மெய் எழுத்துகளும் காணப்படுகின்றன. இவற்றால் உண்டான