பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்துவெளி எழுத்துகள்

221

மொழி இங்ஙனமே படிப்படியாக வளர்ச்சி பெற்று வந்தது” என மொழி நூல் எழுதப் புகுந்த ஆட்டோ ஜெஸ்பெர்ஸன் என்பார் அறைந்துள்ளார். இந்நான்கும் தமிழில் முறையே (1) உரு எழுத்து, (2) தன்மை எழுத்து, (3) உணர்வெழுத்து, (4) ஒலி எழுத்து எனப்படும். இவை விளக்கமாக நன்னூல் மயிலைநாதர் உரையில் (எழுத்தியல் ஈற்றுச் சூத்திர வுரையிற்) காணப்படு கின்றன. யாப்பருங்கல விருத்தியின் கடைசிச் சூத்திர வுரையிலும் இவ்வகை எழுத்துகளைப் பற்றிய இலக்கணம் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. இவற்றுடன் அவ்வுரையில், “மகடூஉ ஆ பிடி, குமரி, கன்னி, பினவு, முடுவல் என்றின்ன சில எழுத்தும் தேர், பதம் முதலிய நால்வகை எழுத்தும், சாதி முதலிய தன்மை எழுத்தும், உச்சாடனம் முதலிய உக்கிர எழுத்தும், சித்திரகாரூடம் முதலிய முத்திற எழுத்தும், பாகியல் முதலிய நால்வகை எழுத்தும், புத்தேள் முதலிய நாற்கதி எழுத்தும், தாது முதலிய யோனி எழுத்தும், மாதமதியம் முதலிய சங்கேத எழுத்தும், கவி முதலிய சங்கேத எழுத்தும், பார்ப்பான் வழக்காகிய பதின்மூன்றெழுத்தும் என்று இத்தொடக்கத்தனவும்.... கட்டுரை எழுத்தும், வச்சிரம் முதலிய வடிவெழுத்தும்.... மற்றும் பலவகையாற் காட்டப்பட்ட எல்லா எழுத்தும் வல்லார்வாய்க் கேட்டுணர்க” என்று கூறியிருத்தல் நோக்கத்தக்கது. மேலும், சிலப்பதிகார்த்தில், காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்தில் இறக்குமதியான மூட்டைகட்கும் பண்டம் ஏற்றிய வண்டிகட்கும் க்ண் எழுத்துகள் இடப்பட்டிருந்தனவாம்.

“வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி”,

“இருபதினாயிரம் கண்ணெழுத்துப் படுத்தன.
கைபுனை சகடமும்”
[1]

“இவற்றால் கடைச் சங்க காலத்தில் (கி.மு.300 கி.பி.200) தமிழ் நாட்டின் கண் எழுத்துகள் வழங்கின.” என்பதை அறியலாம், கண்ணெழுத்து - சித்திர எழுத்து;


  1. Silappathikaram, K. 5, fi, 11 K.25.li 136