பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
17. சிந்துவெளி மக்கள் யாவர்?

இதுகாறும் படித்தறிந்த சரித்திர காலத்திற்கு முற்பட்ட வியத்தகு நாகரிகத்தை வளர்த்துவந்த பண்டைச் சிந்துவெளி மக்கள் யாவர்? இவ்வினாவைக் கேட்பது எளிது விடை அளிப்பது எளிதன்று; எனினும், இது பற்றிப் புதைபொருள் ஆராய்ச்சி யாளர், மண்டைப் புலவர், வரலாற்று ஆசிரியர், மொழிநூற் புலவர் ஆகியவர்கள் தத்தம் அறிவிக்கும் ஆராய்ச்சிக்கும் எட்டியவரை ஒருவாறு விடைகண்டுள்ளனர்; அவர் கருத்துகளை ஈண்டுக் காண்போம் :

பண்டைய இந்திய மக்கள்

ஆரியர் என்னும் மக்கள் இனத்தவர் இந்தியாவிற்கு வரு முன்னர் இந்தியாவில் இருந்த பண்டை மக்கள் யார் என்பதை மண்டைப்புலவர், இந்தியாவின் பல பாகங்களிற் கண்டெடுத்த, மண்டை ஒடுகளைக்கொண்டு ஆராய்ந்து அறிவித்துள்ளனர். திருநெல்வேலியைச் சேர்ந்த ஆதிச்சநல்லூர், வட இந்தியாவில் உள்ள சியால்கோட் பயனா, மொஹெஞ்சொ-தரோ, ஹரப்பா, பலுசிஸ்தானத்தில் உள்ள ‘நால்’ என்னும் இடங்களில் பல மண்டை ஓடுகள் கிடைத்தன. அவற்றைக் கொண்டு நடத்திய சோதனையில், இந்தியாவில் ஆரியர் வருகைக்கு முன் நீக்ரோவர், ஆஸ்ட்ரேலியர், மெலனேஷியர், மத்தியதரைக் கடலினர், மங்கோலியர், அல்பைனர் என்பவர் இருந்தனர் என்னும் செய்தி வெளிப்பட்டது.

நீக்ரோவர்

இந்தியாவின் பழைய குடிகள் நீக்ரோவரே ஆவர். இவர்தம் வழியினரே அந்தமான் தீவினர்; தென் இந்தியக் காடுகளில் உள்ள ‘காடர், இருளர்’ இவர்கள் குட்டையானவர்கள்; சுருண்ட மயிரினர்; முதன் முதல் வில்லைத் தோற்றுவித்தவர்கள்.