பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்துவெளி மக்கள் யாவர்?

233


கறுப்பர், வேள்வி செய்யாதவர்; கொடிய மொழியினர்; பணக்காரர்; கால் நடைகளை வளர்ப்பவர்; ஆரியருடைய பசுக்களைக் களவாடுபவர்; அவர்கள் மேற்கு நோக்கி விரட்டப்பட்டனர். மேலும், ரிக்வேதம் குறிப்பிடும் தாசர் மரபினர் கீகதர், சிம்யூஸ், அஜஸ், யஷுஸ் (இயக்கர்), சிக்ருஸ்; அநாரிய அரசர்களாக இலிபிஷன், துனி, சுமுரி, சம்பரன், வர்ச்சினன், த்ரிபிகன், ருதிக்ரன், அதர்சனி, ஸ்ரிபிந்தன், பல்புதன், பிப்ரு, வங்க்ரிதன் முதலியோர் ஆவர். இவருள் வங்க்ரிதன் 100 நகரங்களைக் கொண்டவன் (பேரரசன்) என்றும், சம்பரன் 90 முதல் 100 வரைப்பட்ட நகரங்களை உடையவன் (பேரரசன்) என்றும் ரிக்வேதமே கூறுதல் காண்க. இவர்களில் பெரும்பாலோர் கங்கைச் சமவெளியில் ஆரியரோடு போரிட்டவர் ஆவர்.[1]

ஆரியர்-அநாரியர் போர்கள்

ஆரியர்-அநாரியர் போர்களைப் பற்றிய செய்திகள் ஒரளவு ரிக்வேதத்திலிருந்து நன்கு அறியலாம். “மாண்புமிக்க இந்திரன் பகைவரை அழிக்கின்றான்; நாம் செய்யும் தூய காரியங்களை அச் சிசின தேவர் (லிங்கவழிபாட்டினர்) அணுகா தொழிவாராக போருக்கு மீண்டும் சென்று, அவர்களை அடக்க ஆர்வங்கொண்டு, போக முடியாத இடங்கட்குப் போய், கொல்ல முடியாத சிசின தேவரைக் கொன்று, அவர்தம் நூறு கதவுகளைக் (Gates) கொண்ட நகரத்தின் செல்வத்தைக் கவர்ந்தவன் இந்திரன் _ கிருஷ்ணனுடைய (கறுப்பன்) வீரர்கள் 10,000 பேர் யமுனைக் கரையில் இருக்கின்றனர். இந்திரன் கிருஷ்ணனது ஆர்ப்பாட்டத்தை உணர்ந்தான். இந்திரன் அந்தக்கொடிய பகைவனை ஆரியர் நன்மைக்காக அழித்தான். இந்திரனே, ‘நான் யமுனைக்கரையில் கிருஷ்ணன்


  1. Ibid p. 105 ‘வணிக + அர் = வணிகர்’. தொல்காப்பியத்தில் இப்பெயருடையவர் தம் இலக்கணம் கூறப்பட்டுள்ளதை இங்கு நினைவிற் கொள்ளற்பாலது. இவ்விலக்கணம் சிந்துவெளி மக்கட்குப் பொருத்தமாக இருத்தலையும் காண்க.