பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதைபொருள் ஆராய்ச்சி

13


அடிப்படையாகக் கருங்கல்லைப் பயன்படுத்தினர். 70 அடி உயரத்தில் செய்குன்றுகள் அமைத்து அவற்றின்மீது சிறியகோவில்களைக் கட்டினர்; தரை மீது பெரிய கோவில்களைக் கட்டினர்; அவர்கள் பயன்படுத்திய மட்பாண்டங்களில் சித்திரங்கள் காணப்படவில்லை. சுமேரியர் மிகப் பழைய காலத்தில் ஆட்டுத் தோலாடை உடுத்தியிருந்தனர்; கல்லின் மீது செதுக்கும் வேலையில் சிறந்திருந்தனர். இதையும் வழிபாட்டுக்குரிய செயல்களையும் செய்யும் பொழுது பெரும்பாலும் ஆடையின்றி இருந்தனர் என்று அறிஞர் கருதுகின்றனர்.

சுமேரியர் வீட்டுச் சுவர்கள் மிது சித்திரங்கள் தீட்டக் கற்றிருந்தனர்; எருதுகளும் கழுதைகளும் பூட்டப்பெற்ற வண்டிகளைப் பயன்படுத்தினர்; செம்பு முதலிய பொருள்களால் ஆன - ஆயுதங்களை வைத்திருந்தனர். அவர்கள் எண்ணுவதில் ஒரு குறிப்பிட்ட முறையைக் கையாண்டு வந்தனர்;[1] ஒரே குறிப்பிட்ட வடிவமுள்ள செங்கற்களையே செய்துவந்தனர்;[2] இறந்தவர்களைத் தாழிகளிற் புதைத்துவந்தனர். அவர்கள் வழிபட்டு வந்த தெய்வங்கள் பலவாகும். ஒரே கோவிலில் பயிர்க்கடவுளான அபு, அக்கடவுளின் மனைவியான இனன்னா, அவர்தம் மகன் ஆக இம்மூன்று தெய்வங்களும் வைத்து வழிபடப்பட்டன.[3] அக் கோவிலின் அடியில் சுண்ணாம்புக் கல்லாலும் பளிங்காலும் ஆன 12 தெய்வங்களின் சிலைகள் காணப்பட்டன. அவை ஒர் அடி உயரம் முதல் இரண்டரை அடிவரை வேறுபட்டிருந்தன. இச்சுமேரியர்தம் மொழி துருக்கி தமிழ் போன்ற ஒட்டு[4] மொழியாகும்.[5]


  1. Sexagesimal System of counting.
  2. Plano-Convex Bricks.
  3. சைவர் வழிபடும் சிவபெருமான். உமையம்மை, முருகக் கடவுள் என்னும் மூன்று கடவுளரையும் இங்கு நினைவு கூர்தல் தகும்.
  4. Agglutinative.
  5. i. Jastrowe’s “The Civilization of Babylonia and Assyria”.