பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதைபொருள் ஆராய்ச்சி

17


ஹரப்பா என்னும் ஆராய்ச்சிக்குரிய இடம் அகப்பட்டது. 1922இல் சிந்து மண்டிலத்தில் உள்ள லர்க்கானாக் கோட்டத்தில் 2100 செ.மீ. உயரம் உடைய மண்மேடு ஒன்று கண்டறியப்பட்டது. அதனுள் புதைந்துள்ள நகரமே மொஹெஞ்சொ-தரோ என்பது. அம்மேட்டின்மேல் நெடுந்தூண் ஒன்று நின்றிருந்தது. இவ் விரண்டு இடங்கட்கும் இடைப்பட்டதொலைவு 640 கி.மீ. ஆகும். இரண்டு இடங்களிலும் சிறிதளவு தோண்டிப் பார்த்த பொழுது, ‘இவை ஆராய்ச்சிக்குரிய இடங்கள்’ என்பதை அறிஞர் அறிந்து கொண்டனர்; இரண்டு இடங்களிலும் பலுசிஸ்தானத்திலும் கிடைத்த மட்பாண்டங்களை ஒப்பிட்டுப் பார்த்த ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான ஸர் ஜான் மார்ஷல் என்னும் பேரறிஞர் பெருவியப்புக் கொண்டார்; அப்பொருள்களை ஆராய்ச்சி செய்து தாம் அறிந்த செய்திகளை மேனாட்டுப் பத்திரிகை ஒன்றில் வெளியிட்டார். இந்திய அரசாங்கம் மகிழ்ந்து பண உதவி செய்தது. அதனால் ஹரப்பாவும் மொஹெஞ்சொ தரோவும் சுறுசுறுப்போடு ஆராய்ச்சி செய்யப்பட்டன. இவ்விரண்டு இடங்கட்கும் இடைப்பட்ட பல்வேறு. இடங்களிலும் சிந்துயாறு கடலோடு கலக்கும் இடம் வரையுள்ள, இடங்களிலும் கீர்தர் மலைத்தொடரை அடுத்துள்ள இடங்களிலும் சிறிதளவு ஆராய்ச்சி வேலைகள் நடைபெற்றன. இவற்றின் விரிவான செய்திகளை அடுத்த பகுதியிற் காண்க.