பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்து வெளியிற் புதையுண்ட நகரங்கள்

21


ஆகிவிட்டன. அதிகாரிகள் இதன் அருகில் புகைவண்டிப் பாதை போட்ட பொழுது, அப்பாதைக்கு வேண்டிய கற்களை, இம்மண்மேட்டைத் தோண்டி உள்ளே இருந்த கட்டிடங்களி லிருந்து எடுத்துப் பயன்படுத்திக்கொண்டனர். இதனால்,ஹரப்பா நகரம் சிதைந்த நிலையை எய்தியது; இதன் முழு நிலைமை இருந்த விதத்தை நாம் இன்று அறியக்கூடவில்லை. எபர் அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் என்னும் ஆராய்ச்சி நிபுணர்க்குச் சித்திர எழுத்துக்களைக் கொண்ட சில முத்திரைகளையே இந்நகரம் ஈந்தது. அது முதல் இந்நகரம் ஆராய்ச்சியாளர் கவனத்தைத் தன்பால் இழுத்தது. இங்கு 1920இல் நடைபெற்ற ஆராய்ச்சியின் பயனாய் இங்கு வாழ்ந்தவராகக் கருதப்பட்ட மக்களின் கல்லறை ஒன்றும் மட்டாண்டங்களும் விலங்குகளின் எலும்புகளும் வேறு சில முத்திரைகளும் கிடைத்தன. அதே சமயத்தில் 1922 இல் சிந்து மண்டிலத்து லர்க்கானாக் கோட்டத்தில் உள்ள மொஹெஞ்சொ-தரோ என்னும் நகரத்தின் ஒரு பகுதி தோண்டப்பட்டது. அங்குச் சில பொருள்கள் கிடைத்தன. இவ்விரண்டு இடங்களிலும் கிடைத்த பொருள்கள் ஒன்றாக இருத்தலை அறிந்த ஆராய்ச்சி நிபுணர்கள், இரண்டு இடங்களிலும் மும்முரமாக ஆராய்ச்சி செய்யலாயினர். எனவே, ஹரப்பா நகரத்தில் புகைவண்டிப்பாதை அமைத்தோரால் தொடப்படாதிருந்த பகுதிகள் தோண்டி எடுக்கப்பட்டன.

பண்டை ஹரப்பா நகரத்தின் சுற்றளவு 4 கி.மீட்டராகலாம். அங்கு ஆறு மண் மேடுகள் இருக்கின்றன. அவற்றுள் பெரியது 29,100 செ.மீ.நீளம், 23,400 செ.மீ. அகலம் உடையது. மேடுகளின் உயரம் 750 செ. மீ. முதல் 1,800 செ. மீ. அடிவரை இடத்திற்கு ஏற்றவாறு காணப்படுகிறது. ஹரப்பா எட்டு அடுக்குகளையுடைய நகரம்: அஃதாவது எட்டுமுறை புதுப்பிக்கப்பட்ட நகரம். இதன் காலம் கி. மு. 3500-கி.மு. 2,750 என்னலாம். இது மொஹெஞ்சொ-தரோவை விடச் சிறிது முற்பட்டது.[1]


  1. M.S.Vat’s Excavations at Harappa’, Vol.I pp.3-21.