பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்து வெளியிற் புதையுண்ட நகரங்கள்

23


ஹரப்பாவில் கண்டெடுத்த சித்திர எழுத்துக்களைக்கொண்ட முத்திரைகளை ஆராய்ச்சிக் கூடத்திற்கு அனுப்பினார். இவ்விரண்டு இடங்களில் கிடைத்த முத்திரைகளையும் மட்பாண்டங்களையும் நன்கு சோதித்து, அவற்றின் ஒருமைப்பாட்டை உணர்ந்த ஆராய்ச்சிக் குழுத்தலைவர் ஸர் ஜான் மார்ஷல் வியப்புற்றார்; அவற்றோடு பலுசிஸ்தானத்தில் கிடைத்த பொருள்களும் ஒன்றுபட்டிருத்தலைக் கண்டு பெருவியப்புற்றார். அன்று (1924) முதல் மொஹெஞ்சொ-தரோ மண் மேடுகள் தம் மெய்யுருவை மெல்ல மெல்ல உலகத்திற்கு உணர்த்தலாயின.

ஸ்தூபத்தையுடைய மண்மேடு

பெளத்த ஸ்துாபத்தைக் கொண்ட மண் மேட்டிற்குக் கால கல் தொலைவிற்றான் மொஹெஞ்சொ-தரோ நகரத்தைக்கொண்ட மண் மேடு இருக்கிறது. ஸ்துபத்தைச் சுற்றியுள்ள மண் மேடுகள் ஏறக்குறைய 750 செ மீ உயரமுடையன. மொஹெஞ்சொ-தரோ நகரத்தின் பல பாகங்கள் இந்த மண்மேடுகட்குள் இருக்கின்றன என்பது ஆராய்ச்சியாளர் கருத்தாகும். ஸ்துபத்தைக் கொண்ட மண்மேடு உள்ள இடமே, மொஹெஞ்சொ-தரோ செழிப்புடன் இருந்த காலத்திலும் சிறந்த இடமாக இருந்திருத்தல் வேண்டும்: அதன் அழிவிற்கு 2500 ஆண்டுகட்குப் பின்னரும் அவ்விடம் உயரிய நிலையில் இருந்தமையாற்றான், பெளத்தர்கள் அங்கு ஸ்துாபியை எழுப்பியிருக்கின்றனர். அந்த மண் மேட்டில் ஸ்துபியும் பெளத்தர் பள்ளியும் நன்கு எழுப்பப்பட்டு இருத்தலின், அவற்றை இவ்வமயம் எடுக்கக்கூடவில்லை. எனினும், அவை நாளடைவில் எடுக்கப்படும். அவற்றின் அடியில் என்ன அரிய பொருள்கள் இருக்கின்றனவோ, அறிந்தவர் யாவர்?

1925-1934 வரை நடைபெற்ற ஆராய்ச்சி

அறிஞர் பானர்ஜி ஸ்தாபங்கொண்ட மண்மேட்டில் சிறிதிடத்தைத் தோண்டியபின்னர், இன்றைய மொஹெஞ்சொ-தரோ நகரம் புதையுண்டிருந்த மண் மேட்டைத் தோண்டும்