பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை


வளத்துக்கும் வாணிகத்துக்கும் இந்தியா எப்போதும் உலக மக்களின் கண்ணில் நிழலாடிக்கொண்டிருக்கிறது; அப்படியே கலை, நாகரிகம் முதலிய பல தலையான ஆராய்ச்சிகளுக்கும் உலக அறிஞர்களின் உள்ளத்தை என்றும் அது கவர்ந்து கொண்டிருக்கின்றது. இந்திய நாட்டின் எல்லை, இந்திய மக்களின் பன்னுற்றுக்கணக்கான சாதி சமய மொழிப் பிரிவுகள், அவ்வவற்றின் பழைமை பெருமை, வளர்ச்சி தளர்ச்சிகள் முதலிய கருத்துக்களைக் குறித்து மேலைநாட்டவரும் கீழைநாட்டவரும் பல காலமாகவே ஆராய்ந்து வருகின்றனர். கடலாழங் காண்பதும் இந்திய் நாகரிக ஆழங் காண்பதும் ஒன்று.

சில காலத்துக்குமுன் வரையில் ஆராய்ச்சியாளர் இந்திய நிலைகளைப் பற்றிப் பற்பல கருத்துடையராயிருந்தனர். ‘இந்திய மக்களில் ஆரிய ரென்பவரே நாகரிகமுடையவர்; அவரது மொழியே வடமொழி யென்பது; அதுவே தமிழ் உட்பட எல்லா இந்திய மொழிகளுக்குந் தாய்; ஆரிய நாகரிகமே உலக நாகரிகங்கட்கு அடிப்படை’ என்பன அக்கருத்துக்களிற் சில. ஆராய்ச்சியாளர் கண்ணுக்கு வடமொழி நூல்களே இந்தியாவின் தலை நூல்கள் என்று அப்போது காணப்பட்டு வந்தமையே அதற்குக் காரணம்.

பின்பு, பண்டைக் காலத்தில் இயற்றப்பட்ட, தமிழ் நூல்கள் சில வெளிப்படலாயின. அவற்றிலிருந்து, தமிழ் மொழியின் பழைமையும் செவ்வியும் ஆராயப்பட்டு, இதற்கு ஆரியமொழி தாய் அன்று என்பதும், இம்மொழியாளரின்

iii