பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

மொஹெஞ்சொ - தரோ


அறியக்கிடக்கிறது. அறிஞர்கள் அதற்குச் சான்ஹு-தரோ என்று பெயர் இட்டுள்ளனர். அறிஞர் மஜூம்தார், சான்ஹு-தரோவில் ஆராய்ச்சி நிகழ்த்திய அளவில், வெவ்வேறு வகையான பொருள்கள் பலவற்றைக் கண்டெடுத்துள்ளார்.

அங்குள்ள வீடுகள் பல உலர்ந்த செங்கற்களால் கட்டப்பட்டவை; சுட்ட செங்கல் கொண்டு கட்டப்பட்டவையும் சில உள. அங்கு அகழப்பட்ட வரையில் 300 பொருள்கள் கிடைத்தன. அவற்றுள் இரத்தின மணிகள் குறிப்பிடத் தக்கவை. இம்மணிகள்மீது ‘8’ போன்ற வடிவம் காணப்பட்டது. அங்குச் சிப்பியாலான வளையல் துண்டுகள் பல கிடைத்தன. ஒரு வளையலில் இரண்டு துளைகள் இருந்தன. அழகிய பந்து ஒன்று வளைந்த கோடுகளுடன் காணப்பட்டது. முத்திரைகள் பல கிடைத்தன. இவற்றுள் ஒன்றில் இரு மனிதர் வில்லும் அம்பும் ஏந்தி நிற்பதுபோலச் செதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அருகில் ஒரு மலையாடு நிற்பது போலக் காணப்பட்டது. விளையாட்டுக் கருவிகள் பல கிடைத்தன. சிறு தேர் உருளைகளும் உடைந்த தேர்கள் இரண்டும் மண்ணில் செய்து சூளை இடப்பட்டவை. எருமைத்தலை ஒன்று செவ்வண்ணம் பூசிக் கழுத்தில் துளையிடப் பட்டுள்ளது. இது போலத் துளையிடப்பட்ட குரங்கு காண்டா மிருகம் முதலியனவும் கிடைத்தன. பறவை ஒன்று மிக்க அழகாய்ச் செய்யப்பட்டுள்ளது. ஓர் ஊதுகுழல் நன்னிலையில் காணப் பட்டது. இவை அனைத்தும் செந்நிறம் பூசப்பட்டவை ஆகும். இவை தவிரக் களிமண்ணாற் செய்த ‘தரைப்பெண்’ தேவதையின் பதுமை ஒன்று கிடைத்தது. இஃது 15 செ. மீ. உயரமுள்ளது. அங்கு 198 மட்பாண்டங்கள் கிடைத்தன அவை பல நிறங்களில் பல்வகை ஒவியங்களுடன் காணப்படுகின்றன. அவற்றுள் ஒருபுறக் கைப்பிடியுடன் காணப்படுகின்றன. அவற்றுள் ஒருபுறக் கைப்பிடியுடன் காணப்பட்ட பாண்டம் ஒன்றே சிறந்ததாகும். அவற்றுடன் செம்புக் கத்தி, வளையல் துண்டு, உளி, ஈட்டிமுனை முதலியனவும் நிரம்பக் கிடைத்தன.