பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாகரிகம் ஆரிய நாகரிகத்தினும் வேறு என்பதும், உயர்ந்தது என்பதும், வேறு சிலவும் விளங்கின.

இதற்குள் நூலாராய்ச்சியே யல்லாமல், ஞால ஆராய்ச்சி, கல்வெட்டு ஆராய்ச்சி, அகப்பொரு ளாராய்ச்சி முதலான பலவகை ஆராய்ச்சிகள் வளர்ச்சிபெறலாயின. இவற்றின் பயனாக, ஒரு காலத்தில் இந்தியாவின் வடபகுதியும், இமயமலையும் கடலுள் இருந்தன; அப்போது இந்தியாவின் குமரிமுனைக்குத் தெற்கே இந்துமாக் கடலில் குமரிக் கண்டம் என்று ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்தது; உலகத்திலேயே மக்கட் பிறவியின் தோற்றம் முதல்முதல் அக் குமரிக் கண்டத்திலேயே உண்டாயிற்று; பின்பு, அக்கண்டம் சிறிது சிறிதாகக் கடலுள். ஆழ்ந்து வடக்கே இமயமலை எழுந்தபோது, அக் கண்டத்திலிருந்த மக்கள் வடக்கே வந்து உலகெங்கும் பரவினர். இப்போது தென்னிந்தியாவாக உள்ள திராவிட நிலப்பகுதி எஞ்ஞான்றும் அழியாத மிகப்பழைய நிலமாதலின், வடக்கிலும் உலகத்திலும் பரவிய மக்கள் இத்திராவிட மக்களின் முன்னோரே யாகின்றனர்; இமய மலைக்கு வடக்கேயும் வடமேற்கேயும் சென்ற அம் முன்னோரே பின்னொருகால் வேற்றுமொழியாளர்போல மாறி மீண்டும் இந்தியாவுக்குள் புகுந்தபோது, அவர்கள் அங்கங்குமிருந்து வந்தவராகக் கூற இடமாயிற்றேயன்றி வேறில்லை; ஆகவே திராவிட நாகரிகமே உலக நாகரிகத்துக்கு அடிப்படை என்னும் உண்மைகளெல்லாம் திட்டமாகக் கண்டுபிடிக்கப் பெற்றன; தமிழர்களின் நல்வினைப்பயனால் 2000 ஆண்டுகட்கு முற்பட்ட சங்கத் தமிழ் நூல்கள் பல இக்காலங்களில் மேலுமேலும் வெளிவந்து, அவற்றின் ஆழ்ந்த அரிய ஆராய்ச்சிகளாலும் மேலுண்மைகள் நன்றாக வலுப்பெறலாயின; குமரிக்கண்ட நாகரிகம் இக்கால

iv