பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற மண்டலங்களின் புதைபொருள்கள்

43


உளிகள், தாழிகள், உரல்கள், பல்வேறு வகைப்பட்ட பிற பொருள்கள், உயர்தர மணிகளாலான பொருள்கள், சித்திர வர்ண வேலைப்பாடமைந்த கலங்கள் முதலியன குகைகளிலிருந்தும் மண் மேடுகளிலிருந்தும் எடுக்கப்பட்டன. கத்தியவாரில் உள்ள ‘லிம்ப்டி’ நாட்டில் ‘அரங்ப்பூர்’ என்னும் இடத்திற் கிடைத்த ஏராளமான மட்பாண்டங்களும் பிற பொருள்களும் மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்தவை போலவே இருத்தல் கவனித்தற்குரியது. இப்பகுதியில் மேலும் விரிவான ஆராய்ச்சி நடைபெறின், சிந்து வெளி நாகரிகம் நருமதை-தபதி யாறுகள் பாய்கின்ற இடங்களிலும் பரவியிருந்த பண்பு புலனாகும்.

பரோடாவில் புதிய கற்கால மக்கள் கையாண்ட மட்பாண்டங்கள் பெருவாரியாகக் கிடைத்தன.அவை சித்திரத்தை யுடைய பலநிறப் பாண்டங்கள் சித்திரம் இல்லாத பாண்டங்கள் என இருவகை யாகும். அவற்றுள்ளும் கரடுமுரடானவை, மழ மழப்பு உடையவை, கண்ணுக்கு இனியவை, சித்திரம் தீட்டப் பெற்றவை என நான்கு வகை உண்டு. இவை நேரே கண்டு இன்புறத் தக்கவையே அன்றி எழுத்தால் அறிந்து இன்புறுத்தக்கவை அல்ல.

ஹைதராபாதில் பல இடங்களில் இத்த்கைய பல் வகைப்பட்ட மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன. ‘பல்லாரிக் கோட்டத்தில் உள்ள இராமன் துர்க்க மலைகளைச் சார்ந்த தார்வார்-பாறைகளின் மேற்குப்புற எல்லையில், புதிய கற்கால மக்கள் வைத்திருந்த பலவகை நிறங்கள் கொண்ட களிமண் பொருள்களும் பிறவும் பெருவாரியாகக் கண்டெடுக்கப் படுகின்றன’, என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

மைசூர் நாட்டிலும் முன் சொன்ன பல நிறப்பாண்டங்கள் பல கிடைத்துள்ளன; பழைய கற்கால மக்களும் புதிய கற்கால மக்களும் கட்டிவிட்டுச் சென்ற ஒரு வகைக் கற்கோவில்களும் சவக் குழிகளும் கிடைத்துள்ளன.