பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற மண்டலங்களின் புதைபொருள்கள்

45


பெரிய மண்மேடுகட்குக் கிழக்குப் பக்கத்தில், புதிய கற்காலத்துக்கு உரிய சித்திரம் தீட்டப் பெற்ற ‘குதிர்’ ஒன்று அகப்பட்டது. இஃது ஏதேனும் ஒரு கூலப் பொருளைச் சேமித்து வைக்கப்பெறும் பெரிய ‘குதிர்’ ஆகும். இதில் பட்டையாக நிறம் தீட்டப்பட்டுள்ளது. அப்பட்டைக்கு இண்டயில் பலவண்ண வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. பண்பட்ட களிமண் காப்புகள் பல இடங்களில் அகப்பட்டன. அவற்றின்மீது வேலைப்பாடுகள் நிறைந்துள்ளன. சிப்பி வளையல்கள் பலவகை வேலைப்பாடுகளுடன் கூடியனவாகக் கிடைத்துள்ளன.

சென்னைக்கு அடுத்த பல்லாவரத்தில் களிமண்ணும் மணலும் கலந்து செய்யப்பெற்ற (terra cotta) மனித உருவம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதன் கால்கள் குட்டையாக இருந்தன. அங்குப் பிணம் புதைக்கும் தாழிகள் பலவுங் கண்டெடுக்கப் பட்டன. சேலத்தில் பல்லாரி முதலிய கோட்டங்களிற் கிடைத்த மட் பாண்டங்களைப் போன்ற பொருள்களே மிகுதியாகக் கிடைத்தன், செந்நிற மண்ணாலாய பெண் உருவங்கள் சில கிடைத்தன. இப்பெண் உருவங்களின் கூந்தல் அலங்காரம் ஆராய்ச்சியாளர் கருத்தைக் கவர்ந்தது. கூந்தல் பல சுருள் சுருளாகத் தலைமுழுவதும் சுருட்டப்பட்டு, அச்சுருள்கள் மீது உயர்ந்த சீப்புகள் செருகப்பட்டமாதிரி காணப்பட்டது.[1] இவ்வகை அலங்காரம் கொள்ளும் பெண்கட்குக் கழுத்தணி (அட்டிகை போன்றது) அவசியமாகும். பெண்கள் உறங்கும்பொழுதும் அக்கூந்தற் சுருள்கள் அவிழாமல் இருத்தற்கு கழுத்தணியே வேண்டற்பாலது. இங்ஙனம் உதவும் கழுத்தணி ஒன்று மைசூர்ப்பகுதியில் காவிரியாற்றின் கரை அருகில் தோண்டி எடுக்கப்பட்டது.சேலம் கோட்டத்தில் குடிசைகளைப் போன்ற பிணப்பெட்டிகள் பல கண்டெடுக்கப்ட்டன.இவைபோன்றவை பல கூர்ச்சரத்திலும் அகப்பட்டன.[2]


  1. இதே கூந்தல் அலங்காரமும் சிப்புச் செருகலும் சிந்து வெளி மாதரிடம் இருந்த பழக்கங்கள் ஆகும் என்பது இங்கு அறியத் தக்கது.
  2. P.T.S.Iyengar’s ‘Stone Age in India’, pp. 19-40.