பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

மொஹெஞ்சொ - தரோ


மகிழ்ச்சிக்குரிய மண்மேடு

கோயமுத்துர்க் கோட்டம் பல்லடம் தாலுகாவில் உள்ள செட்டிபாளையம் என்னும் ஊருக்கு அண்மையில் வயல் வெளியில் ஒரு மண்மேடு இருக்கின்றது. அதன் நீளம் 2550 செ.மீ; அகலம் 2130 செ. மீ. அதன் உயரம் மிகக் குறைவாகும்.அதன் ஒரு புறம் சிறிய கூழாங்கற்களின் குவியல் இருக்கின்றது. அம்மேடுள்ள இடித்தில் மட்பாண்டச் சிதைவுகளும் பல வகை உலோகப் பொருள்களும் எலும்புகளும் கிடக்கின்றன. மேட்டின் நடு இடத்தில் கற்குகை போன்று ஒன்று காட்சி அளித்துக்கொண்டு இருந்தது. ஆராய்ச்சியாளர் அதனைத் தோண்டிப் பார்த்த போது இது கல்லாலான பிணக்கோவில்[1] என்பது தெரிந்தது. அஃது ஒரு நீள சதுர அறையாகும்; 240 செ.மீ. நீளமும் 142.5 செ.மீ அகலமும் 15 செ. மீ. உயரமும் உடையது; பெருங்கற்களால் கட்டப்பட்டது. அதன் கூரையாக அமைந்த கல் 322.5 செ. மீ நீளமும் 20 செ. மீ. அகலமும் 30 செ. மீ. உயரமும் கொண்டிருந்தது. அக்கோவிலின் உட்புறத்தில் பலவகைப் பண்டைப்பொருள்கள் இருந்தன. மழமழப்பான கறுப்புநிற மண்பாண்டங்கள் நல்ல நிலையிற் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது: நீர் அருந்தும் செம்புக் கோப்பை ஒன்று கிடந்தது; வேறொரு கோப்பையின் மூடிமீது ஆடு (மான்?) நிற்பது போலச் செதுக்கப்பட்டுள்ளது; இக் கோப்பை பாரசீகத்தில் “லூரித்தான்’ என்னும் இடத்தில் கிடைத்த வெண்கலப் பாத்திரங்கள் நினைப்பூட்டுவது’ என்று ஆராய்ச்சியாளர் அறைகின்றனர்.இவை கிடைத்த மண்மேட்டுக்கு அருகில் வேறு பல மண்மேடுகள் ஆங்காங்கு இருக்கின்றன. இவை அனைத்தும் ஆராய்ச்சிக்கு உட்படுமாயின் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட தென் இந்திய நாகரிகத்தை அறிய வசதி உண்டாகும் என்று அறிஞர் கருதுகின்றனர்.[2]


  1. Megalithic Monument.
  2. ‘Annual Reports of the Archaeological Survey of India’ for the year 1930-1934; PartI, pp. 112, 113.