பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற மண்டலங்களின் புதைபொருள்கள்

47


புதுக்கோட்டையில் தாழிகள்

புதுக்கோட்டையைத் தமிழ்நாட்டிற் புதை பொருள் ஆராய்ச்சிக்குரிய திருப்பதியாகச் சொல்லலாம். அங்கு முன் சொன்ன பலவகை மட் பாண்டங்கள் கிடைத்துள்ளன. அங்குப் புதிய கற்கால மக்களுடைய பிணம் புதைக்கும் பலவகை முறைகளைக் காணலாம். மண் தாழியில் உடல் உட்கார வைக்கப் பட்டு, அதன்மேல் மணல் பாதியளவு பரப்பப்ட்டு, அவ்வளவுக்கு மேல் அரிசியும் பிற கூலப்பொருள்களும் கொண்ட தட்டொன்று வைக்கப்பட்டுத் தாழி புதைக்கப்பட்டுள்ளது. அத்தாழியின் பக்கங்களில் இறந்தவன் பயன்படுத்திய கற்கருவிகளும் பிறவும் வைக்கப்பட்டுள்ளன. தாழி, மணல் நிரம்பப் பரப்பப்பட்டு மூடியிட்டுப் புதைக்கப்பட்டுள்ளது. தாழியைப் புதைத்த குழி, மணல் போடப்பட்டுப் பாறையால் மூடப்பட்டுள்ளது. அப் பாறையின் மீது மீண்டும் மணல்கொட்டிப் பாதி முட்டைவடிவம் போன்ற பாறை ஒன்றால் மூடப்பட்டுள்ளது.இப்பாறையைச் சுற்றி ஒரு முழம் உயரமுடைய கற்கள் புதைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை சமத்தானத்தில் நீர்ப்பசையுள்ள இடங்களின் அருகிர்ல ஆயிரக்கணக்கான தாழிகள் புதைக்கப்பெற்ற இடங்கள் பல கற்கள் வரை உள்ளன. இவ்விடங்கள், சுற்றிலும் உள்ள தரையைவிட்ச் சிறிது உயர்ந்துள்ளன. இப்பகுதிகளை மேலாகத் தட்டினால் அவற்றின் ஒசை நன்கு கேட்கும். இத்தாழிகள் உருவத்தில் பலவாறு வேறுபட்டுள்ளன; சில 120 செ. மீ. உயரமும் 105 செ. மீ. குறுக்களவும் கொண்டுள்ளன. [1]சில தாழிகள் கோடுகளைக் கொண்டுள்ளன. இரும்புக் காலத்துச் சவப் பெட்டிகள் இரண்டாக பகுக்கப்பட்டுள்ளன. ஒன்றில் பிணமும் மற்றொன்றில் அவ்விறந்தவர் பயன்படுத்திய பொருள்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தாழிகள் உள்ள இடங்களைச் சோதித்துப் பார்த்தால், பண்டைக்கால மக்களைப்பற்றிச் சுவை பயக்கும் செய்திகள் பல நன்குணரலாம்.


  1. P.T. Srinivasa Iyengar’s ‘Stone Age in India’; pp. 14, 24.