பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

மொஹெஞ்சொ - தரோ


கிடைத்த வெண்கலப் பொருள்களை ஒத்துள்ளது. இன்ன பிற காரணங்களால் அப்பண்டைக் கால மக்கள் ஆசிய, ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் அறிவியல் துறையிலும் வாணிபத் துறையிலும் நெருக்கமான தொடர்பு கொண்டிருத்தல் வேண்டும் என்னும் பேருண்மை புலனாகும்.[1]

பண்டைத் தமிழ் நகரங்கள்

‘வடஇந்தியாவை விடத்தென்னாடு பழைமை வாய்ந்ததாதலின், மெய்யான ஆராய்ச்சிக்கு உரிய இடம் தென்னாடே ஆகும்’ என்று, நிலநூற் புலவர் கூறுகின்றனர் என்பதை முன்னரே குறிப்பிட்டோம் அல்லமோ? ஆதலால், முன் சொன்ன தென்பகுதிகளில் ஆராய்ச்சி செய்தல் இன்றியமையாததாகும். மேலும், தமிழகத்தை ஆண்ட முடியுடை மூவேந்தர் தம் தலைநகரங்களில் பேராராய்ச்சி நடத்தல் மிகவும் இன்றியமையாததாகும். சோழநாட்டில் உறையூர், திருவாரூர், காவிரிப்பூம்பட்டினம் என்பன மிக்க பழைமை வாய்ந்தன. காவிரிப்பூம்பட்டினம் நெடுங்காலமாக மேனாடுகளுடனும் கீழ்நாடுகளுடனும் வாணிபம் செய்து வந்த நகரமாகும். அது கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கடலுக்கு இரையானதென்று மணிமேகலை கூறுகின்றது. திருமறைக்காடு எனப்படும் வேதாரண்யம் பழைய காலத்தில் ஒரு துறைமுகப் பட்டினமாக இருந்தது. அந்த இடத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கும் நெடுந்துரமில்லை இன்றும் சிறுவணிகர் தம் பொருள்களைப் படகுகளில் ஏற்றிக் கொண்டு யாழ்பாணத் தீவுகட்குச் சென்று வாணிபம் செய்கின்றனர். அத் துறைமுகப்பட்டினமும் ஆராய்ச்சிக்குரியதாகும். அதைப் போலவே பாண்டியர் பழம்பதியாகிய அலைவாய் (கபாடபுரம்) கடல் கோளால் அழிவுற்றதென்று இறையனார் களவியல் உரையும், சிலப்பதிகார உரையும் செப்புகின்றன. இப்பட்டினம் சிறந்த நாகரிகத்தோடு இருந்த பாண்டியர் பழம்பதி என்று வான்மீகி இராமாயணம் கூறுகின்றது. இராமாயணத்தின் காலம் ஏறக்குறைய கி.மு.1000க்கு முற்பட்டதென்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.


  1. P.T.S.Iyengar’s ‘Stone age in India’ p.43.