பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வட இந்தியரும் தென்னிந்தியருமாகத் திரிந்து பல சாதியினராயினர்; இதனால் இந்தியர் யார் என்பதே தெரிந்து கொள்வது அரிதாயிற்று.

இத்தகைய உற்ற நேரத்திலேதான், இந்தியாவின் வடமேற்கே சிந்து ஆற்றின் கரைமருங்கு இற்றைக்கு 5000 ஆண்டுகட்குமுன் சிறந்த திராவிட நாகரிகத்தோடு விளங்கியிருந்து பின் மண்மூடுண்ட ‘மொஹெஞ்சொ-தரோ’ ‘ஹரப்பா’ முதலிய பெரு நகரங்கள், அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்டன. தக்க நாகரிகச் சான்றுகள் அவற்றிலிருந்து நேரிற் கண்டெடுக்கப்பட்டுச் சிறந்த ஆராய்ச்சி யறிஞர்களால் நன்கு சோதனை செய்யப்பெற்றன: சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்பது காண்டலளவையாலும் மலையிலக்காகத் துலங்குவதாயிற்று. இற்றைக்கு 4500 ஆண்டுகட்கு முன் இந்தியா முழுமையும் திராவிடமே யென்று விளக்கி, நிலப்படப் புத்தகத்திற் (Atlas) படமும் எழுதப்பெற்றிருக்கிறது.

திராவிடர் இப்போது எந்நிலையி லிருக்கின்றனர். தம் முன் நிலைகளைச் சிறிதேனும் எண்ணிப் பார்ப்பாராயின், இந்தியாவில் சாதியாலும் மொழியாலும் சமயத்தாலும் பல பிரிவினராய் ஒற்றுமையின்றி எழுச்சியின்றி மேலுமிருக்க ஒருப்படுவரோ! திராவிடர் தம் தொன்மையையும் வன்மையையும் உலகறிய வைத்து வாழவன்றோ முற்படுவர்! இவ் வுணர்ச்சியும் முயற்சியும் உண்டாகும் பொருட்டே இம் மொஹஞ்சொ-தரோ ஆராய்ச்சிகளை விளக்கமாகத் தமிழ்மொழியில் எழுதுவித்து வெளியிடுகின்றோம். இவ் வெளியீடு அக் கருத்தைச் செவ்வனம் நிறைவேற்றுமென்று நம்புகிறோம்.

vi