பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4. நகர அமைப்பும் ஆட்சி முறையும்

மறைந்தாரின் மண்மேடுகள்

மொஹெஞ்சொ-தரோ நகரம் அமைந்துள்ள இடத்தில் பல மண்மேடுகள் இருக்கின்றன. அவற்றுள் பெரியது 117,000 செ.மீ. நீளமும் 60,300 செ மீ அகலமும் உடையது. இது தெற்கு வடக்காக அமைந்துள்ளது. இதற்கு 18000 செ மீ மேற்கே இதற்கடுத்த பெரிய மண்மேடு ஒன்று இருக்கின்றது. இதுவும் தெற்கு வடக்காக அமைந்துள்ளது. இதன் நீளம் 39,500 செ மீ அகலம் 29700 செ.மீ பெரிய மேட்டிற்கு வடக்கிலும் கிழக்கிலும் சிறிய மண் மேடுகள் பல இருக்கின்றன.முதலில் குறிப்பிட்ட இரண்டுபெரிய மண்மேடுகளும் முதலில் ஒன்றாகவே இருந்தனவா. அன்றி இரண்டாகவே இருந்தனவா என்பதை இன்று உறுதியாகக் கூறல் இயலாது. இவ்விரண்டுக்கும் இடையில் உள்ள இடத்தைத் தோண்டிப் பார்த்த பின்னரே முடிவு கூறுதல் இயலும். இவ்விரண்டு பெரிய மண்மேடுகளும் நகரமாகவும், சுற்றியுள்ள பிற சிறிய மண் மேடுகள் நகரத்தைச் சேர்ந்த பகுதிகளாகவும் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இம்மண்மேடுகள் சிறிதுமங்கிய செந்நிறத்துடன் காணப்படுகின்றன.

ஆற்றோரம் அமைந்த நகரம்

புதிய கற்கால மக்களும் செம்புக்கால மக்களும் அறிவு வளர வளர, ஆற்றோரங்களில் நகரங்களை அமைத்துக்கொண்டு வாழ்ந்திருந்தனர் என்று முதற் பகுதியிற் கூறினோம். நாம் கூறியாங்கே, இவ்விரு காலங்களையும் சேர்ந்த சிந்து நாட்டு மக் கள் தம் வாழ்விற்கு உரிய இடங்களை ஆற்றோரங்களில் அமைத்துக் கொண்டிருந்தமை கவனித்தற்குரியது. மொஹெஞ்சொ தரோ சிந்து ஆற்றின் கரையில் அமைந்திருந்தது. ஹரப்பா, ராவி ஆற்றின் கரையில் அமைந்திருந்தது. மரக்கலப் போக்குவரத்து வசதி கருதியே இந்நகரங்கள் ஆற்று ஓரங்களில் அமைக்கப்