பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நகர அமைப்பும் ஆட்சி முறையும்

59


மூடப்பெற்ற கால்வாய்கள்

தெருக்களில் ஒடும் பெரிய கால்வாய்கள் மீது நீண்ட சதுர வடிவில் 30 செ. மீ. நீளமுடைய செங்கற்கள் பதித்து நெடுக மூடப்பட்டுள்ளன. சில இடங்களில் 56.5 செ. மீ. நீளமுள்ள கற்களும் மூடுவதற்காகப் பயன்படுத்தப்பட்டு உள்ளன. ஆயின், இடை இடையே கட்ட செங்கற்களாலும் கருங்கற்களாலும், சுண்ணக் கற்களாலும் செய்யப் பெற்ற மூடிகள் பொருத்தப்பெற்று இருக்கின்றன. கால்வாய்களில் சகதி படிந்து கழிவுநீர் எளிதில் ஒட இயலாதவாறு தடையுண்டாகா திருத்தலைப் பார்த்துக் கொள்ளவே இக்கற்கள் அழுத்தமாக வைத்து மூடப்படாமல் பொருத்தப்பெற்று உள்ளன என்பது எளிதிற் புலனாகின்றது.

இடை இடையே பெருந் தொட்டிகள்

நீண்ட கால்வாய்களுக்கு இடையிடையே மூலை முடுக்குகளில் கழிவுநீர் தேங்குவதற்குப் பெருந்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து நீரை வேறு வழியே கொண்டு செல்லும் கால்வாய்கள் தொட்டிகளுடன் இணைப்புண்டு இருக்கின்றன. அக்குட்டைகளிலிருந்து நீண்ட தாடிகளை விட்டு இரு புறத்துக் கால்வாய்களையும் இயன்ற அளவு தூய்மை செய்யவே அவை அமைக்கப்பட்டுள்ளன என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அக்குட்டைகட்கும் அகன்ற மேல்மூடிகள் உள்ளன. அப்பண்டைக் கால உலகத்தைச் சேர்ந்த எந்த நாகரிக நாட்டிலும் இச்சிறந்த கால்வாய் அமைப்பு முறை இல்லை, இல்லை என்று ஆராய்ச்சி அறிஞர் ஒவ்வொருவரும் வியந்து கூறுதல் கவனித்தற் குரியதாகும்.

மதகுள்ள கால்வாய்கள்

பெரிய கால்வாய்கள் முடிவுறும் இடங்களில் 120 செ. மீ. அல்லது 150 செ. மீ. உயரமும் 75 செ. மீ. அகலமும் உள்ள மதகுகள் கட்டப்பட்டுள்ளன. அம்மதகுகட்கு மேல் வளைந்த உத்திரங்களுடன் கூடிய கூரை வேயப்பட்டுள்ளது. இத்தகைய