பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கட்டிடங்கள்

73


இவ் வடிகால்கள் தெருக் கால்வாயுடன் இணைக்கப் பெற்றுள்ளன. இவ்வடிகாலுக்கு உரிய புழிையுள்ள இடம் நோக்கி நீராடும் அறையின் தரைமட்டம் சரிந்து செல்வது குறிப்பிடத் தக்கது. இத்தகைய நீராடும் அறை ஒன்று எஷ்னன்னாவில் இருந்த அக்கேடியர் அரண்மனையுள் இருந்தது. அக்கேடியர் நீராடும் அறை அமைப்பதைச் சிந்துப் பிரதேச மக்களிடமிருந்தே கற்றிருத்தல் வேண்டும் என்பதில் ஐயமில்லை.[1]

சமையல் அறைகள்

ஒவ்வொரு வீட்டாரும் பெரும்பாலும் முற்றத்தண்டை சமையல் செய்து வந்த போதினும், சமையலுக்கென்று தனி அறையையும் வைத்திருந்தனர். அந்த அறையில் விற்கு வைக்கவும் பிற சமையற் பொருள்களை வைக்கவும் தனி மேடைகள் கட்டப்பட்டுள்ளன. சில பெரிய வீட்டுச் சமையல் அறைகள் அகன்று இருக்கின்றன. அவற்றுள் பெரிய தாழிகள் பதிக்கப்பட் டிருந்தமைக்குரிய அடையாளங்கள் இருக்கின்றன. அத்தாழிகள் நீரைச் சேமித்து வைக்கப் பயன்பட்டிருக்கலாம். மேலும், சமையல் அறையில் சமையலுக்குரிய சாமான்களை வைக்கப் பல மண் சாடிகள் பயன்படுத்தப்பட்டன. இப்பழக்கம் இன்றும் மொஹெஞ்சொ-தரோவைச் சுற்றியுள்ள கிராமத்தாரிடம் இருப்பதைக் காணலாம். சமையல் அடுப்புகள் சிலவே காணப்பட்டன. அவை மெசொபொட்டேமியாவில் கிடைத்த அடுப்புகளைப் போலவே இருத்தல் வியப்புக்கு உரியதே.[2]

அங்காடியோ? அம்பலமோ?

ஓரிடத்தில் மிகப் பெரிய மண்டபம் ஒன்று காணப்பட்டது. அது 76500 ச. செ. மீ. பரப்புடையது. அதன் கூரையை இருபது செங்கல் தூண்கள் தாங்கி நிற்கின்றன.


  1. Patrick Cartleon’s Buried Empires’, p.148.
  2. Dr.Mackay’s; The Indus Civilization, pp.39, 40, 43.