பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கட்டிடங்கள்

79


செல்கின்றது. அப்பாதை இரு பக்கங்களிலும் பொதுத் தெருக்களில் கலக்கின்றது. இவ்வில்லங்கள் எகிப்தில் உள்ள கெல்-எல் அமர்னா[1] என்னும் இடத்தில் அமைந்துள்ள தொழிலாளர். இல்லங்களைப்போலவே இருத்தல் குறிப்பிடத் தக்கது. ஆனால், பின்னவை ஒரே வரிசையில் அமைந்துள்ளன; இடையில் பாதை விடப்பட்டில. மேலும், ஹரப்பாவில் உள்ள தொழிலாளர் இல்லம் ஒவ்வொன்றிலும் பெரிய முற்றமும் மூன்று அறைகளும் இருக்கின்றன. இங்ஙனம் எகிப்திய இல்லங்கள் அமைந்தில. மேலும், ஹரப்பாவின் இல்லங்கள் கி.மு.2500க்கு முற்பட்டன; ஆனால், எகிப்திய இல்லங்கள் கி.மு.2000க்குப் பிற்பட்டன. இப் பிற்கால இல்லங்களைவிட ஹரப்பாவில் உள்ள முற்கால இல்லங்கள் சுகாதார வசதியோடு பிற வசதிகளும் பொருந்தியிருக்கும்படி அமைக்கப்பட்டிருத்தல் பெருவியப்புக்கு உரியதே ஆகும். வெளியிலிருந்து பார்ப்பவர்க்கு உட்புறம் தோன்றாதவாறு இவ்வில்லங்களின் தலைவாயில் வளைந்த சுவர்களுடன் அமைந்துள்ளது. இவ்விடுதிகளில் பலவகைத் தொழில்புரி மக்கள் வாழ்ந்திருந்தனர் என்று எண்ணுதற்குரிய அடையாளங்கள் இருக்கின்றன.

வீட்டிற்கு உரிய வீடுகளே

‘அறம், பொருள், இன்பம், வீடு என்னும் பேறுகள் நான்கனுள், வீடு’ என்பது ‘இன்பம்’ அல்லது ‘மோக்ஷம்’ எனப் பொருள்படும். மனிதன் இவ்வுலகில் தன் உயிருக்குயிரான பெற்றோருடனும் மனைவி மக்களுடனும் நீண்ட நாள் கலந்து உறவாடி இன்பம் நுகரும் இடமாக உள்ளது வீடே அன்றோ? அவ்வில்லம் நல்ல சுகாதார முறைப்படி அமைந்திருக்குமாயின், நோய் நொடியின்றி உடல் வளம் குன்றாமல் சுறுசுறுப்பாக வினை யாற்றிப் பொருளிட்டி இல்லறமென்னும் நல்லறம் துய்த்து இன்ப வாழ்வு வாழலாம் அன்றோ? இங்ஙனம் இன்பம் (வீடு) தரத்தக்க


  1. Tel El Amarna’ in Egypt.