பரதனும் பாதுகையும்
ஸ்ரீராமருடைய பாத தூளிபட்ட மாத்திரத்தில். கல்லாகச் சபிக்கப்பட்டுக் கிடந்த அகல்யை சாப விமோசனம் பெற்றுப் பழைய சொரூபத்துடன் உயிர் பெற்றெழுந்தாளாம்.
ராமருடைய பாத தூளிக்கு அத்தனை மகிமை. இந்தக் காலத்தில் அப்பேர்ப்பட்ட மகா புருஷனைக் காண்பதரிது.
கல்மேல் பாத தூளி பட்ட மாத்திரத்தில் கல்லுக்கு உயிர் வரும் காலமல்ல இது. வேண்டுமானால் கல்லில் கால் தடுக்கிக் கீழே விழுந்து உயிர் போகலாம். அவ்வளவுதான்!
அவ்வளவு மகிமை வாய்ந்த ஸ்ரீராமருடைய பாதத்தைக் காத்து ரட்சித்த ஒரு ஜோடிப் பாதரட்சையும் உண்டு.
பாதரட்சை என்பதாக ஒரு ஜோடி வஸ்து இருக்கிறதே! அந்த வஸ்துவை நான் வெகு நாள்வரை லட்சியம் செய்யாமலிருந்தேன். இயற்கையோடு கலந்த வாழ்க்கையை நடத்த வேண்டும் என்ற கட்சியைச் சேர்ந்தவன் நான்.
வெகுநாள்வரை நான் குடை, செருப்பு இந்த இரண்டு வஸ்துக்களையும் உபயோகிக்காமல்தான் இருந்தேன். கொஞ்ச நாட்களுக்கெல்லாம் குடை இரவல் கொடுக்கும் நண்பர்கள் இரவல் கொடுப்பதற்கு மறுக்க ஆரம்பித்துவிட்டதால் சென்ற வருஷம் துணிந்து ஒரு குடை வாங்கிவிட்டேன்.
ஆனால் பாதரட்சை விஷயத்தில் நான் காத்துக்கொண்டிருக்கவில்லை. 'அகல்யா சாப விமோசனம்' கதையைக் காலஞ்சென்ற மாங்குடி சிதம்பர பாகவதர் காலக்ஷேபத் தொடர்ச்சியில் கேட்ட மறுதினமே ஒரு ஜோடி செருப்பு வாங்கிவிட்டேன்.
அகல்யையினுடைய சாப விமோசனம் ஏற்படும்போது ஸ்ரீராமருடைய காலில் பாதரட்சை இருந்ததா இல்லையா என்று எனக்கு நிச்சயமாய்த் தெரியாது.