உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

மௌனப் பிள்ளையார்


சித்ரலேகை புன்னகை பூத்த முகத்துடன் பாலகோபாலை வரவேற்று உபசரித்தாள். அப்போது யாரோ தனக்கு அறிமுகமில்லாத ஒருவன் அங்கே உட்கார்ந்திருந்ததைப் பார்த்த பாலகோபாலனுக்கு என்னவோபோல் ஆகிவிட்டது. இதற்குள் சித்ரலேகை, "இவர் என்னுடைய பள்ளிக்கூடத் தோழர்; சீமையில் நாங்கள் இருவரும் ஒரே வகுப்பில் படித்துக்கொண்டிருந்தோம். இவர் பெயர் கங்காதரன் என்று அறிமுகப்படுத்தினாள். பாலகோபாலனும் கங்காதரனும் விளக்கெண்ணெய் சாப்பிட்ட மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

சித்ரலேகையிடம் பேசமுடியாமல் தவித்தார் பாலகோபால். அதைக் கண்ட அந்த வாலிபன் தானாகவே அந்த இடத்தை விட்டு நழுவி வெளியே சென்றுவிட்டான். பாலகோபால் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். அப்புறம்தான் அவருக்கு வாயிலிருந்து பேச்சு வந்தது.

"சித்ரலேகா! நான் ஒரு வாரமாய் ஊரில் இல்லை. இதோ பார்; இந்த அட்டிகையை வாங்குவதற்காக எங்கெல்லாம் அலைந்து திரிந்தேன் தெரியுமா?" என்று சொல்லிச் கொண்டே அட்டிகை வைத்திருந்த 'வெல்வெட்' பெட்டியை அவளிடம் நீட்டினார்.

பெட்டியைத் திறந்து பார்த்த சித்ரலேகையின் கண்கள் வைரம்போல் பிரகாசமடைந்தன. ரொம்ப நன்றாயிருக்கிறது. எனக்காகவா வாங்கி வந்தீர்கள்?” என்று கேட்டாள்.

"ஆமாம்; உனக்காகவேதான். உன்னுடைய அழகுக்கு இதெல்லாம் ஒரு பிரமாதமா?" என்றார் பாலகோபால்.

"நீங்கள் என்னை அளவுக்கு மீறிப் புகழ்கிறீர்கள். நான் அவ்வளவுக்கெல்லாம் அருகதையில்லை. இந்த அட்டிகையை நான் எப்படி ஏற்றுக்கொள்வது? கலியாண விஷயமாக நான் எந்தவிதமான வாக்குறுதியும் கொடுக்கவில்லையே?"

"சித்ரலேகா! நீ என்னைக் கலியாணம் செய்துகொள்ள மறுத்தாலும் பரவாயில்லை.இதை உனக்குப் பரிசாகக் கொடுத்தே தீருவேன்" என்றார் பாலகோபால்.