பக்கம்:ரமண மகரிஷி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

ரமண மகரிஷி


வேட்டியைத் துண்டு துண்டாகக் கிழித்து கோவணங்களாக்கி, அதை மாற்றி மாற்றிக் கட்டிக் கொண்ட கோவணாண்டியாகக் காட்சித் தந்தார்! மிகுதியிருந்த சட்டையுடன், கோவணங்களாகக் கிழித்தத் துண்டைத் தவிர, பிற அனைத்தையும் அய்யங்குளத்துக்கே ஆடைகளாக்கினார்!

ரமண மகரிஷி வெங்கட்ராமன் என்ற பெயரோடு இருந்தபோது பெற்றோர் அவருக்குப் பூணூல் அணிவித்தார்கள். அந்தப் பூணூல் கூட, மக்கள் இடையே சாதி வித்தியாசங்களை உருவாக்கிவிடும் அளவு கோலாக இருப்பதை அவர் நெஞ்சம் உணர்ந்ததால், அந்த உயர்சாதி அடையாளமாக இருந்த பூணூலை அறுத்து அய்யங்குளத்திலே தூக்கி எறிந்தார்! ‘பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்’ என்ற தத்துவத்தின் ஞானியானார்!

உலகப் புகழ் பெற்று பொருளாதாரத்தில் வசதி வாய்ப்புகளில் வளர்ந்திருந்த போதும், அவர் அதே கோவணான்டிக் கோலத்தோடு வாழ்ந்தாரே தவிர, பட்டு பீதாம்பரத் திருமகனாக வாழ்ந்தவரல்லர்! அளவான உணவு உண்டு, அளவான வாழ்க்கைக்கு அளவு கோலாக வாழ்ந்தார் ரமண மகரிஷி!

அருணாசலமே கதியென நம்பி, தவம் தியானங்களைத் தவறாமல் செய்து, அருணாசலலேசுவரரின் அடிமையாக வாழ்ந்த அந்த மகானைக்கூட காலம் என்ற மரண நோய் விடாமல் பற்றிக் கொண்டு வாட்டி வதைத்து வேதனைப் படுத்தியது.

கட்டி ஒன்று தோன்றி, அவருடைய இடது கைச் சதையைச் சிறிது சிறிதாக தின்று கொண்டே வந்தது. மகரிஷி ரமணரின் ரத்தத்தை விஷமாக்கியது.

இடது கையில் முதலில் சிறு கட்டியாகத் தோன்றியது. அது ஒரு மாதம் கழித்து அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. மீண்டும் அதே இடத்தில் ஒரு மாதம் கழித்து பெரிய கட்டியாகத் தோன்றியது. மறுபடியும் இரண்டாவது முறையாக கட்டியை அறுவைச் சிகிச்சை செய்தார்கள் வித்தக டாக்டர்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/102&oldid=1280180" இலிருந்து மீள்விக்கப்பட்டது