பக்கம்:ரமண மகரிஷி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

101



இரமணன் அருளாசியைப் பெற்று வரும் பக்த கோடிகள், செல்வர்கள், கல்விமான்கள் பத்திரிக்கையாளர்கள், அவரைப் பலவழிகளிலும் பின்பற்றி வந்த மனித நேயர்கள். இறையபிமானிகள், எல்லாருமே அவரது நோய்நிலை கேட்டு அளவிலா துன்பத்தில் மூழ்கிக் கிடந்தார்கள்.

அதற்குப் பிறகு அடுத்த மாதமே மீண்டும் அந்தக் கட்டி வந்து விட்டது. அப்போது ரமண மகரிஷி மீது அல்லும் பகலும் அக்கறை கொண்ட அவரது சீடர்கள், நீங்கள் மற்றவர்களை எல்லா வகையிலும் குணப்படுத்துகிறீர்களே, உங்களை நீங்கள் எங்களுக்காகவாவது சுகப்படுத்திக் கொள்ளக் கூடாதா? என்று மனம் நொந்து கண்ணீர் சிந்தி மகரிஷியைக் கேட்டார்கள்.

அதற்கு “இந்த உடம்பிடம் உங்களுக்கு ஏன் இந்தப் பற்று? அதைப் போக விடுங்கள்” என்று பகவான் ரமணர் திருவாய் மலர்ந்தருளினார்.

இதற்குப் பிறகு மகரிஷியின் கட்டிக்கு ரேடியம் சிகிச்சை அளிக்கப்பட்டது மருத்துவம் அவரது உடலை எவ்வளவு வருத்தினாலும் அதற்காக அவர் மனம் கங்காமல், வரும் பக்தர்களுக்கு அப்போதும் புன்னகை பூத்தே அருளாசி வழங்கினார்.

கட்டியை ஊடுகதிர் படம் எடுத்து டாக்டர்கள் பார்த்தார்கள். மகரிஷி ரமணருடைய கையைத் துண்டிப்பதைத் தவிர வேறோர் வழியேதுமில்லை என்று மருத்துவ திறனாளர்கள் முடிவு கட்டினார்கள்.

இந்த முடிவை பகவான் ரமணரிடம் டாக்டர்கள் தெரிவித்தபோது, “உங்கள் உடலை நீங்களே கவனித்துக் கொள்ள நான் விடுவது போல, நீங்களும் என்னைச் சும்மா விட்டுவிடுங்கள்” என்றார் மகான் ரமணரிஷி!

மகரிஷிக்கு வந்தது என்ன நோய் என்று மருத்துவத்துறை ஆய்வு செய்தபோது, ரமணருக்கு வந்தது புற்று நோய் அல்ல; நியூரோ-சார்கோமா என்ற ஒரு வகை நோயென்று உணரப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/103&oldid=1280183" இலிருந்து மீள்விக்கப்பட்டது