பக்கம்:ரமண மகரிஷி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

11



நன்றாக வாழவேண்டும் கடவுளே’ என்று இறைவனை இறைஞ்சுவார்களாம்! இது எப்படி? இதுதானே மனித நேயம் மாண்பு?

சுந்தரமய்யரிடம் பணம் திரளத்திரள, அன்றாடம் விருந்தினர்களும், புதுப்புது நண்பர்களும் எந்த நேரமும் அவரது வீட்டுக்கு வந்து சென்று கொண்டிருப்பது வாடிக்கை ஆகிவிட்டது. தொழில் பெருக்கம் மட்டுமே இதற்குரிய காரணமன்று! அந்த ஊர் பிரசித்திப் பெற்ற சிவத் தலமல்லவா? அதனால், தினந்தோறும் அக்கிராமத்தைக் கடந்து போகும் யாத்திரீகர்களுக்கு அன்னதானம் செய்வதற்காகவே ஒரு சத்திரத்தையும் அவர் கட்டி விட்டார். அந்த விடுதியில், நல்ல விருந்தும், உபசரிப்புகளும் முகங்கோணாமல் தினந்தோறும் நடைபெற்று வந்தது. நாளடைவில் இந்தப் பசி தீர்க்கும் விருந்து மிகவும் புகழ்பெற்று வளர்ந்தது.

சுந்தரமய்யருக்கும், அழகம்மாளுக்கும் பிறந்த குழந்தைகளில் மூத்த மகன் பெயர் நாகசாமி, இரண்டாம் மகன் வெங்கட்ராமன், மூன்றாம் பிள்ளை பெயர் நாக சுந்தரமாகும்.

இதில் இரண்டாவது ஆண்குழந்தை 1879-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், முப்பதாம் நாள் பிறந்தது. அக்குழந்தை பிறந்த நேரத்தில், திருச்சுழி பூமிநாதர் திருக்கோவில் திருவிழா நடந்து கொண்டிருந்தது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியால், அன்ன சத்திரத்தில் விருந்தினர் முதல் கிராம மக்கள் எல்லாருக்கும் தடபுடலான விருந்துகள் தாராளமாக நடைபெற்றன.

அன்று இரவு திருச்சுழி பூமிநாதப் பெருமான் தேர் மூலமாக கிராமத்தை வலம் வந்து, கோயில் வாயிலை அடைந்த போது, வெங்கட்ராமன் என்ற அந்தக் குழந்தை பிறந்ததால், ஊராரும், உற்றாரும், பெற்றாரும் பெரிதும் மகிழ்ந்து, குழந்தையைப் போற்றி மகிழ்ந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/13&oldid=1280079" இலிருந்து மீள்விக்கப்பட்டது